வியாழன், 29 பிப்ரவரி, 2024

15. தவக்காலம், இரண்டாம் வாரம், வெள்ளி - 01.03.2024 'வெள்ளிக்காசுக்கு விற்றனர்'




தொடக்க நூல் 37:3-28 - யோசேப்பு விற்கப்பட்டார்

திருப்பாடல் 105 - ஆண்டவரின் வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்

மத்தேயு 21:33-43,45-46


இயேசுவும் யோசேப்பும் விற்கப்பட்டவர்கள். முதல் ஏற்பாட்டின் மிக ஒழுக்கமான மனிதர்களில் முக்கியமானவர் யோசேப்பு. இந்த யோசேப்பு கடவுளால் விசேட விதமாக அன்பு செய்யப்பட்டார், ஆனால் பல துன்பங்களை தாங்கிக் கொள்ள அவர் அழைக்கப்பட்டார். தந்தையின் விசேட அன்பு, இவரை மற்ற பிள்ளைகளின் வெறுப்பிற்கு ஆளாக்கியது. கடவுள் கொடுத்த சிறந்த திறமைகள், மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டியது. இவருடைய ஒழுக்கமான வாழ்க்கை இவருக்கு சிறையை பரிசளித்தது. ஒருவகையில் தந்தையால் கைவிடப்பட்டார், பின்னர் சகோதரர்களால் விற்கப்பட்டார். எகிப்திய அதிகாரி போத்திபாரின் வீட்டிற்கு அவர், ஆசீர் கொண்டுவந்தார், ஆனால் அவர் மனைவி அவரை தீய கண்ணோடு நோக்கி, சிறையியடைத்தார். எகிப்திய பாரவோனின் அதிகாரிகளுக்கு இறைவாக்குரைத்தார், ஆனால் அவர்கள்  அவரை சிறையில் வாட விட்டுவிட்டார்கள். எல்லோராலும் கைவிடப்பட்டவர், தன் ஆளுமையினால் கைவிடப்படவில்லை, கடவுளாலும் அவர் நித்தியத்திற்கும் கைவிடப்படவில்லை. மீண்டு வந்தார், எகிப்தின் பஞ்சத்தையும், கானானின் பஞ்சத்தையும் எதிர்த்து போராடி, அவரை வெறுத்தவர்களையே, வாழவைத்தார். யோசேப்பு என்ற பெயரிற்கு அர்த்தத்தையும் கொடுத்தார். நாடு பகிர்ந்தளிப்பிலே, இவர் ஒருவருக்குத்தான், எப்ராயிம் மனாசே, என்ற இரண்டு பங்குகள்-கோத்திரங்கள் கொடுக்கப்பட்டன

இயேசுவும் தன் சீடனால் விற்கப்பட்டார். அவர் யூதாசாலா விற்கப்பட்டார்? நற்செய்திகளின் ஆசிரியர்கள், அவரை விற்வர்களை யூத மக்கள் என்று சொல்லவில்லை, மாறாக அவரை எதிரியாக பார்த்த ஒரு சில யூதர்கள் என்றே சொல்கிறார்கள். இந்த ஒரு சில யூதர்கள், யார்? இயேசுவை தங்களின் கருத்துக்களை கேட்காதவராக, தங்களின் அநீதியான அமைப்புக்களை ஏற்றுக்கொள்ளாதவராக, அவர்களின் நம்பிக்கையில்லாத பக்திச் செயல்களை அனுசரிக்காதவராக, தங்களின் அர்த்தமில்லாத சடங்குகளை எதிர்க்கிறவராக, கண்டவர்கள். அப்போது அவர்கள் ஒரு சில யூதர்கள், இன்று அவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கலாம். நானாகவும் இருக்கலாம், நாங்களாகவும் இருக்கலாம். ஆண்டவரை விற்று பிழைப்பதை இந்த உலகம் நிறுத்தவேண்டும், அது தப்பிப் பிழைக்க.  


புதன், 28 பிப்ரவரி, 2024

14. தவக்காலம், இரண்டாம் வாரம், வியாழன் - 29.02.2024 'சபிக்கப்படுவர்'


 14. தவக்காலம், இரண்டாம் வாரம், வியாழன் - 29.02.2024 'சபிக்கப்படுவர்'

எரேமியா 17:5-10 - பேறுபெற்றோரும் சபிக்கப்பட்டோரும்

திருப்பாடல் 1: ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்

லூக்கா 16: 19-31 - அவர்கள் நம்ப மாட்டார்கள்


சபிக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இந்த இரண்டு சாராரும் சேர்ந்து உலகை உருவாக்குகின்றார்கள். சபிக்கப்பட்டவர்கள், இவர்கள் யாரால் சபிக்க்படுகிறார்கள்? இவர்கள் தங்களால் தாங்களே சபிக்கப்படுகிறார்கள். இயேசு யாரையும் சபிக்கிறவர் அல்ல. சாபத்தைக் குறிக்க ஆரூர் (אָר֤וּר) என்ற எபிரேயச் சொல் விவிலியத்தின் முதல் ஏற்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றது. இன்றைய திருப்பாடல நற்பேறு பெற்றவர் யார் என்பதை மிக அழகாகக் காட்டுகிறது. நறபேறு பேற்றவர், கடவுளின் திட்டப்படி நடக்கிறவர், இதனை செய்யாத போது, அவர் தன்னைத் தானே சபிக்கப்பட்டவர் நிலைக்கு தள்ளிக்கொள்கிறார். ஆசீரும், சாபமும் ஒவ்வொருவருடைய தெரிவைப் பொறுத்தே அமைகிறது

ஆசீர் பெற்றவர்கள், தங்களின் உலகத்தை பெரிதாக்கிக் கொண்டு, நிம்மதியான வாழ்வை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், மனத்தால் உலகத்தையே ஆட்கொண்ட செல்வத்தர்கள் ஆகிறார்கள்: ஆனால் சபிக்கப்பட்டவர்கள், செல்வர்கள் ஆனாலும், உண்மையிலேயே ஏழைகளாக இருக்கிறார்கள்

ஒரு மனிதனுடைய உண்மையான ஆசீர், கடவுள். இயேசுதான், ஒரு மனிதனுடைய ஆசீர். இயேசுவை தனதாக்கிக் கொள்கிறவர், யாரையும் ஆசீர்வதிக்க தேவையில்லை, அவர் அசீராகவே மாறிவிடுகிறார். ஆசீர் மிக பெறுமதி வாய்ந்தது, இதற்கு பலவற்றை செலவு செய்ய வேண்டும், மனக்கோட்டைகள், மனச் சுவர்கள் உடைக்கப்பட வேண்டும். தற்பெருமை, ஆணவம், இறுமாப்பு, நான் என்ற மமதை, சுயநல திட்டங்கள் இல்லாமல் ஆக்கப்படவேண்டும். இந்த தவக்காலத்தில், ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாக மாற்றம் பெறுவோம்


திங்கள், 26 பிப்ரவரி, 2024

12. தவக்காலம், இரண்டாம் வாரம் - 27.02.2024 'அறிவுரையைக் கேளுங்கள்'


 எசாயா 1:10.16-18 - நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்

திருப்பாடல் 50: - தம் வழியை செம்மைப்படுத்துவோர், கடவுளின் மீட்பைக் காண்பர்

முத்தேயு 23:1-12 - அவர்கள் சொல்வார்கள் செய்ய மாட்டார்கள்

சொல்பவரெல்லாம் செய்பவராக இருந்தால், இந்த உலகத்தில் தீமையே இருக்காது. இங்கே சொல்பவர்கள்தான் அதிகம். ஏன் இந்த மயக்கம்? நல்லது மற்றும் நீதியானது அனைவரும் கண் முன்னாலேயே தெரிகிறது, ஆனால் அதனைச் செய்ய முனைகிறபோது பலவற்றை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இடத்தை தக்க வைக்கவும், சுகபோகங்களைக் காத்துக்கொள்ளவும், இருந்ததையே நடைமுறைப்படுத்த மனம் விரும்புகிறது, இதானல், சரியானது மனதிற்கு தெரிந்தும், பிழையானதையே செய்வது வழக்கமாகிவிட்டது

இயேசுவுடைய காலத்தில் பரிசேயர்களும், மறைநால் அறிஞர்களும், பணியிலிருந்தார்கள். இந்த பரிசேயர்கள், ஒரு பொதுநிலையினர் குழுவாக, இயேசுவுடைய காலத்தில் மிகவும் பிரசித்திபெற்றவர்களாக இருந்தார்கள். மக்கள் இவர்களை கதாநாயகர்களாக பார்த்தார்கள். இவர்கள் உலக காரியங்களை வெறுத்து, சதுசேயர்கள் என்ற தலைமைக் குருக்களைச் சார்ந்த பிரிவினரை எதிர்த்து, மோசேயின் சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் காலப்போக்கில், இவர்கள் மக்களை திருப்திப்படுத்துவதற்கு முக்கியம் கொடுக்காமல், தங்கள் சட்டங்களையும், தங்களை பரிசேயர்களாக மாற்றிய ஒழுங்குமுறைகளை மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்கள். இதனால்தான் இவர்களின் வாழ்க்கை முறை, மக்களுக்கு பாரமாக உள்ளது என்று ஆண்டவர் சாடுகிறார்

மறைநூல் அறிஞர்கள் என்ற இந்த படித்த சமூகம், பழைய ஏற்பாட்டின் இறுதிக் காலத்தில் வளர்ந்திருக்க வேண்டும். பபிலோனிய அடிமைத்தனத்தில், இவர்கள் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருந்திருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும், இறைவார்த்தைக்கு அர்ப்பணித்தவர்கள். இவர்களும், காலம் செல்லச் செல்ல, இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை விட்டுவிட்டு, தங்க்ள தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், தங்களுக்கு தெரிந்தபடி, இறைவார்த்தைக்கு விளக்கம் கொடுக்க முயன்று, இயேசு ஆண்டவரின் பார்வைக்கு ;ளளாகிறார்கள்

இப்படியாக, நல்லதற்காக தொடங்கப்படுகின்ற சபைகள், தீமையிலே அழிந்து போகின்றன. நாம் நல்லதை நினைக்கலாம், அதனை செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும். நல்லதை செய்ய விரும்பலாம், நிச்சயமாக அதனை செய்யவே வேண்டும. நல்லதை செய்வோம், அதனை இன்றே செய்வோம். தவக்காலம் அதற்கு நமக்கு உதவட்டும்




ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

12. தவக்காலம், இரண்டாம் வாரம் - 26.02.2024 'இரக்கமுள்ளவர்களாக இருங்கள்'


 தானியேல்: 9:4-11 நாங்கள் பாவம் செய்தோம்

திருப்பாடல்: 79 - எங்கள் பாவங்களுக்கு ஏற்றபடி நடத்தாதேயும்

நற்செய்தி: லூக்கா - 6:36-38


ஏன் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும்? இதுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்கும் கேள்வி. இரக்கத்தைக் குறிக்க றகாம் רַחַם என்ற சொல் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த சொல், தாயின் கருப்பையைக் குறிக்கிறது. தாயின் கருப்பையிலிருந்தே, இரக்கம் பிறக்கிறது என்பது மிக அழகான அர்த்தத்தைக் கொடுக்கிறது. இருந்தாலும், இந்த சொல் ஓர் ஆண்பால் சொல். இதிலிருந்து, றகாம்-இரக்கம் என்பது அனைவருக்கும் பெருத்தமான ஒரு பண்பு என்பது புலனாகிறது

இன்றைய உலகம் போதிக்கும், கெத்து, வன்முறை, அடாவடித்தனம், திமிரு போன்ற சினிமா பண்புகள், இரக்கம் என்ற இறையரசின் புன்னியத்திலிருந்து நம்மை தூர கொண்டுபோய் விட்டுவிட்டது. இரக்கமுடையவர்கள், கோழைகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இரக்கம் உடையோர், காலம் கடந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் 'திமிரு' என்ற அடையாளத்தை கொண்டவர்கள், வீரர்களாக கதாநயகர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த சொல்லை சினிமாவுக்கும் தலைப்பாக கொடுத்துள்ளார்கள். பல யூடிப் சிறிய காணொளிகளில் இந்த தலைப்பில் பல வீடியோக்களும் உள்ளன. சில முச்சக்கர வண்டிகளின் பின்னாலும், இந்த சொல்லையும், அதனை புகழ்வதையும் காணலாம்

இந்த ஆபத்தான சிந்தனையிலிருந்து விடுபடுவதற்கு, இத்தவக்காலம் ஒரு நல்ல வாய்ப்பு. கடவுள் நம்மீது இரக்கம் உள்ளவாராய் இருக்கிறார், ஆகவே நாம் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் பாவிகாக இருந்தும், கடவுள் நம்மை அவமானப்படுத்துவதில்லை, கடவுள் நம்மை கைவிடுவதில்லை, கடவுள் நம்மை அழந்துபோகும் அளவிற்கு தண்டிப்பதில்லை. ஆகவே, மனிதர்களாக இருக்க, இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்







வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

10. தவக்காலம், முதலாம் வாரம், சனி - 24.02.2024 'அயலான்'



10. தவக்காலம், முதலாம் வாரம், சனி - 24.02.2024 'அயலான்'

இணைச்சட்ட நூல் 26:16-19 - கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நாங்கள்

திருப்பாடல் 119 - ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

நற்செய்தி 5:43-48 - கடவுளைப் போல நிறைவுள்ளவராக இருங்கள்


தூய்மை ஒரு அழைப்பு. இஸ்ராயேல் மக்கள் தங்களை தூயவர்கள் எனக் கருதினார்கள். இந்த தூய்மைதான் தங்களை மற்றவரிடமிருந்து பிரிக்கிறது என நம்பினார்கள்.. தங்களைச் சுற்றி வாழ்ந்த கானானியர், மொசப்தோமியர், எகிப்தியர், இத்தியர், கிரேக்கர், உரோமையர்கள், மற்றும் தூரத்து நாட்டு மக்களைவிட எதோவிதத்தில் தாங்கள் விசேடமானவர்கள் என நம்பினார்கள். இந்த விசேட தன்மை எதிலிருந்து வருகிறது. இந்த விசேட தன்மை அவர்களின் தூய்மை என்ற பண்பிலிருந்து வரவில்லை மாறாக அவர்களின் தெரிவிலிருந்தே வருகிறது. அவர்கள் தூய்மையாக இருந்தார்கள் என்பதால் அவர்கள் அழைக்ப்படவில்லை, மாறாக அவர்கள் அழைக்கப்பட்டதால் தூய்மையாக மாறினார்கள். எந்த விதத்திலும் அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் இல்லை, மாறாக கடவுள் அவர்களை தெரிவு செய்ததால், அவர்கள் தனித்துவமானவர்களாக மாறினார்கள். அவர்களின் தனித்துவத்திற்கு காரணம், கடவுள் மட்டுமே

இந்த விசேட அம்சம், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நாம் தனித்துவமானவர்கள், காரணம் நம் கிறிஸ்து தனித்துவமானவர். கிறிஸ்தவர்களின் விசேடத்துவதற்கு காரணம், அவர்களின் அழைப்பு மற்றும் தெரிவு. இது சாதாரணமானது அல்ல, அல்லது உடனடியானதும் அல்ல. இதற்கு ஒருவர் வருந்தி தன்னை ஈடுபடுத்த வேண்டும். இதனால்தான், முதல் ஏற்பாடு இஸ்ராயேல் மக்களை தூய்மைக்கு அழைக்கிறது, புதிய ஏற்பாடு கிறிஸ்தவர்களை நிறைவுக்கு அழைக்கிறது. தூய்மையும், நிறைவும் ஒன்றுதான். எப்போது நமக்கு, நம் அயலவர்கள், நம்மைவிட குறைந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அன்று இந்த நிறைவும், தூய்மையும் நம்மைவிட்டு அகன்று போகின்றன என்பது உண்மை. யார் நம் அயலார், அனைவரும் நம் அயலவரோ, நம் சந்தித்தவர்கள், சந்திக்கின்றவர்கள், சந்திக்கப் போகிறவர்கள் அனைவரும் நம் அயலவரே. தூய்மையிலும், நிறைவிலும் கடவுளைக் காண்போம் இந்த தவக்காலத்தில்


 

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...