10. தவக்காலம், முதலாம் வாரம், சனி - 24.02.2024 'அயலான்'
இணைச்சட்ட நூல் 26:16-19 - கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நாங்கள்
திருப்பாடல் 119 - ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்
நற்செய்தி 5:43-48 - கடவுளைப் போல நிறைவுள்ளவராக இருங்கள்.
தூய்மை ஒரு அழைப்பு. இஸ்ராயேல் மக்கள் தங்களை தூயவர்கள் எனக் கருதினார்கள். இந்த தூய்மைதான் தங்களை மற்றவரிடமிருந்து பிரிக்கிறது என நம்பினார்கள்.. தங்களைச் சுற்றி வாழ்ந்த கானானியர், மொசப்தோமியர், எகிப்தியர், இத்தியர், கிரேக்கர், உரோமையர்கள், மற்றும் தூரத்து நாட்டு மக்களைவிட எதோவிதத்தில் தாங்கள் விசேடமானவர்கள் என நம்பினார்கள். இந்த விசேட தன்மை எதிலிருந்து வருகிறது. இந்த விசேட தன்மை அவர்களின் தூய்மை என்ற பண்பிலிருந்து வரவில்லை மாறாக அவர்களின் தெரிவிலிருந்தே வருகிறது. அவர்கள் தூய்மையாக இருந்தார்கள் என்பதால் அவர்கள் அழைக்ப்படவில்லை, மாறாக அவர்கள் அழைக்கப்பட்டதால் தூய்மையாக மாறினார்கள். எந்த விதத்திலும் அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் இல்லை, மாறாக கடவுள் அவர்களை தெரிவு செய்ததால், அவர்கள் தனித்துவமானவர்களாக மாறினார்கள். அவர்களின் தனித்துவத்திற்கு காரணம், கடவுள் மட்டுமே.
இந்த விசேட அம்சம், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நாம் தனித்துவமானவர்கள், காரணம் நம் கிறிஸ்து தனித்துவமானவர். கிறிஸ்தவர்களின் விசேடத்துவதற்கு காரணம், அவர்களின் அழைப்பு மற்றும் தெரிவு. இது சாதாரணமானது அல்ல, அல்லது உடனடியானதும் அல்ல. இதற்கு ஒருவர் வருந்தி தன்னை ஈடுபடுத்த வேண்டும். இதனால்தான், முதல் ஏற்பாடு இஸ்ராயேல் மக்களை தூய்மைக்கு அழைக்கிறது, புதிய ஏற்பாடு கிறிஸ்தவர்களை நிறைவுக்கு அழைக்கிறது. தூய்மையும், நிறைவும் ஒன்றுதான். எப்போது நமக்கு, நம் அயலவர்கள், நம்மைவிட குறைந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அன்று இந்த நிறைவும், தூய்மையும் நம்மைவிட்டு அகன்று போகின்றன என்பது உண்மை. யார் நம் அயலார், அனைவரும் நம் அயலவரோ, நம் சந்தித்தவர்கள், சந்திக்கின்றவர்கள், சந்திக்கப் போகிறவர்கள் அனைவரும் நம் அயலவரே. தூய்மையிலும், நிறைவிலும் கடவுளைக் காண்போம் இந்த தவக்காலத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக