தொடக்க நூல் 37:3-28 - யோசேப்பு விற்கப்பட்டார்
திருப்பாடல் 105 - ஆண்டவரின் வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்
மத்தேயு 21:33-43,45-46
இயேசுவும் யோசேப்பும் விற்கப்பட்டவர்கள். முதல் ஏற்பாட்டின் மிக ஒழுக்கமான மனிதர்களில் முக்கியமானவர் யோசேப்பு. இந்த யோசேப்பு கடவுளால் விசேட விதமாக அன்பு செய்யப்பட்டார், ஆனால் பல துன்பங்களை தாங்கிக் கொள்ள அவர் அழைக்கப்பட்டார். தந்தையின் விசேட அன்பு, இவரை மற்ற பிள்ளைகளின் வெறுப்பிற்கு ஆளாக்கியது. கடவுள் கொடுத்த சிறந்த திறமைகள், மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டியது. இவருடைய ஒழுக்கமான வாழ்க்கை இவருக்கு சிறையை பரிசளித்தது. ஒருவகையில் தந்தையால் கைவிடப்பட்டார், பின்னர் சகோதரர்களால் விற்கப்பட்டார். எகிப்திய அதிகாரி போத்திபாரின் வீட்டிற்கு அவர், ஆசீர் கொண்டுவந்தார், ஆனால் அவர் மனைவி அவரை தீய கண்ணோடு நோக்கி, சிறையியடைத்தார். எகிப்திய பாரவோனின் அதிகாரிகளுக்கு இறைவாக்குரைத்தார், ஆனால் அவர்கள் அவரை சிறையில் வாட விட்டுவிட்டார்கள். எல்லோராலும் கைவிடப்பட்டவர், தன் ஆளுமையினால் கைவிடப்படவில்லை, கடவுளாலும் அவர் நித்தியத்திற்கும் கைவிடப்படவில்லை. மீண்டு வந்தார், எகிப்தின் பஞ்சத்தையும், கானானின் பஞ்சத்தையும் எதிர்த்து போராடி, அவரை வெறுத்தவர்களையே, வாழவைத்தார். யோசேப்பு என்ற பெயரிற்கு அர்த்தத்தையும் கொடுத்தார். நாடு பகிர்ந்தளிப்பிலே, இவர் ஒருவருக்குத்தான், எப்ராயிம் மனாசே, என்ற இரண்டு பங்குகள்-கோத்திரங்கள் கொடுக்கப்பட்டன.
இயேசுவும் தன் சீடனால் விற்கப்பட்டார். அவர் யூதாசாலா விற்கப்பட்டார்? நற்செய்திகளின் ஆசிரியர்கள், அவரை விற்வர்களை யூத மக்கள் என்று சொல்லவில்லை, மாறாக அவரை எதிரியாக பார்த்த ஒரு சில யூதர்கள் என்றே சொல்கிறார்கள். இந்த ஒரு சில யூதர்கள், யார்? இயேசுவை தங்களின் கருத்துக்களை கேட்காதவராக, தங்களின் அநீதியான அமைப்புக்களை ஏற்றுக்கொள்ளாதவராக, அவர்களின் நம்பிக்கையில்லாத பக்திச் செயல்களை அனுசரிக்காதவராக, தங்களின் அர்த்தமில்லாத சடங்குகளை எதிர்க்கிறவராக, கண்டவர்கள். அப்போது அவர்கள் ஒரு சில யூதர்கள், இன்று அவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கலாம். நானாகவும் இருக்கலாம், நாங்களாகவும் இருக்கலாம். ஆண்டவரை விற்று பிழைப்பதை இந்த உலகம் நிறுத்தவேண்டும், அது தப்பிப் பிழைக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக