30.06.2024
துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல. காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு, மனிதர்கள், அல்லது ஆன்மீக வாதிகள் என தங்களை அடையாளம் காண்கிறவர்கள், இந்த கேள்வியிலிருந்து தப்பி விடுகிறார்கள். சாலமோனின் ஞானம், முன்வைக்கும் கேள்வி. மனிதர்களின் துன்பத்தில் மகிழ, கடவுள் என்ன சக மனிதரா? நீதிக்கு இறப்பில்லை என்ற இறைவார்த்தை நம்பிக்கையைத் தருகிறது. கடவுள், நம்முடைய துன்பத்த்தில் மகிழ்கிறவராக
இருந்திருருந்தால், மனித உடலேற்பில் பங்கெடுத்திருக்கவேண்டிய தேவையிருந்திருக்காது. துன்பம் என்பது ஒரு மறைபொருள் என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். முதல் ஏற்பாட்டில் யோபுக்கு தோன்றிய பல கேள்விகள் இன்றும் நமக்கு தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகம், இரண்டு பெண்களின் துன்பங்களைப் பற்றிப் பேசுகின்றன. இரத்தப்போக்கு நோய். உண்மையில் ஒரு பலவீனம், இது உடல் சார்ந்த, ஒரு சிலரை கடுமையாக வதைக்கும், கடுமையான துன்பம். அதிகமான ஆண்களுக்கு இதன் தார்ப்பரியம் தெரிவதில்லை. நாம் எல்லோரும் பெண்களின் கர்ப்பத்தில் உருவாகிறோம் என்பதால், பெண்களில் உடலியல் நோய்களைப் பற்றிய அறிவு நமக்கு நிச்சயமாக வேண்டும், அதுதான் நீதி. இன்றும் சில ஆண்களுக்கு, பெண்களின் இரத்தபோக்கு நோயை கேலிசெய்கின்ற அசிங்கமான ஆணாதிக்க செயற்பாடுகளும் இல்லாமல் இல்லை. இன்னும் சில பிற்போக்குதனமான பாரம்பரியங்கள், இவ் 2024ம் ஆண்டில் கூட, பெண்களின் உடலியல் யதார்த்தத்தை, தீட்டு, துடக்கு என்று சொல்லி படைத்தவரையே அசிங்கப்படுத்துவதையும் காணலாம். இதனை பொய்யான, அல்லது ஆண்கள் உருவாக்கிய சட்டங்களைக் கொண்டும், யாதங்கள், புராணங்கள், மத நம்பிக்கைகளைக் கொண்டும் நியாயப்படுத்துவார்கள். இதற்கு சில பெண்களும் சோடைபோவது இன்னும் துன்பமாக விடயம்.
இயேசு ஆண்டவர், இந்த உலகில் தோன்றிய மிக அழகான மனிதர். இந்த உண்மைக் கடவுள், மனிதராக தோன்றி மனிதர் எப்படி இருக்க வேண்டும், வாழவேண்டும், ஆண் என்றால் யார், என்பதைக் காட்டியிருக்கிறார், வாழ்ந்திருக்கிறார். இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எந்த சட்டமும் இயேசுவை கட்டுப்படுத்தாது. இயேசு கட்டுப்படுத்தாத எந்த சட்டமும், நமக்கு தேவையும் இல்லை. இயேசு பெண்களை மதிக்கிறார், அது யாயீரின் மகளாக இருந்தாலும் சரி, இரத்த போக்குடைய பெண்ணாக இருந்தாலும் சரி, நம் வீட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, அவர் தொட்டுக்குணப்படுத்துவார். தலித்தா கூமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக