8. தவக்காலம், முதலாம் வாரம், வியாழன் - 22.02.2024
1பேதுரு 5: 1-4: விருப்போடு பணி செய்யுங்கள்
திருப்பாடல் 23: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை
மத்தேயு 16: 13-19: யோனவின் மகன் சீமோனெ நீர் பேறு பெற்றவன்
இயேசுவை யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? இன்று உலகம் இயேசுவை ஒரு கதாநாயகனாக, சமூக நிதி மனிதராக, தெய்வங்களுள் ஒருவராக, மெய்யியல்வாதியாக, இறையியல்வாதியாக, பலவாராக காண்கிறது. இது எல்லாம் அவருடைய ஒரு பகுதி மட்டுமே, அதுவும் மனிதக் கண்ணோட்டத்தில் மட்டும்தான். இயேசு யார்? என்பதை ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் 'இக்துஸ்' என்ற சொல்லின் மூலமாக அறிக்கையிட்டார்கள் இந்த சொல் மீனைக் குறிக்கவும் பயன்பட்டது. இதனால்தான் கிறிஸ்தவர்கள் தங்கள் மறைமுக குறியீடாக மீனைப் பயன்படுத்தினார்கள். இக்துஸ் ἰχθύς என்பது 'இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், மீட்பர்' என்ற நம்பிக்கை அறிக்கையை குறிக்கிறது.
இந்த நம்பிக்கையின் மையத்திற்கு கிறிஸ்தவர்கள் செல்ல வேண்டும். இயேசு அனுபவம் ஒரு தனி மனித அனுபவமாக இருந்தாலும், அது ஒரு நம்பிக்கை அறிக்கை. இந்த நம்பிக்கை அறிக்கை வெறுமனே உள்ளார்ந்த மனதோடு நின்றுவிடக்கூடாது. பலர் இயேசுவிற்கு ரசிகராக மாற விரும்புகிறார்கள். இயேசுவிற்கு ரசிகர்கள் மற்றும் அனுதாபக்காரர்கள் தேவையில்லை, அவருக்கு சாட்சிகளும், சீடர்களுமே தேவை. மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கு தேவையில்லை, நான் இயேசுவைப் பற்றி எனந் நினைக்கின்றேன். எனக்கு இயேசு தேவையா? அல்லது இயேசுவிற்கு நான் தேவையா? நான் அவருக்கு தேவை என்பது போல அவர் காட்டினாலும், உண்மையில் நான் அவருக்கு தேவையா? நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரில் பெரிய மாற்றம் ஏற்படாது. அவர் மீட்பராகவே இருப்பார். என்னுடைய இடத்தை நிரப்ப பலர் உள்ளார்கள். நான் ஒன்றும் நிரப்பப்பட முடியாதவன் அல்ல. எனக்கு தரப்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பம். இந்த வாழ்க்கை சந்தர்ப்பத்தை நான் எப்படி பயன்படுத்துகின்றேன் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. சரியாக இயேசுவை அறிந்து கொள்வோம் அதனால் வாழ்வு பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக