தவக்காலம், முதலாம் வாரம், திங்கள் - 19.02.2024
லேவியர் 19:1-2, 11-18 - தூயவராய் வாழ அழைப்பு
திருப்பாடல் 19 - ஆண்டவரின் வார்த்தைகள் தூய ஆவியைக் கொண்டுள்ளன
மத்தேயு 25:31-46 - தீர்ப்பு அனைவருக்கும் நிச்சயம்
தூய்மை என்பது அகத்திலும் புறத்திலும் இருக்க வேண்டும். அகத்தின் தூய்மை புறத்தில் நிச்சயமாக வெளிப்படும், அதேபோல புறத்தின் தூய்மை அகத்தை நிச்சயமாக தூய்மைப் படுத்தும். ஆனால், ஒருவர் அகத்தை ஆசுத்தமாக வைத்துக்கொண்டு, புறத்தை தூய்மையானது போல காட்ட முடியும். அது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. ஏன் நாம் தூய்மையான வாழ்விற்கு அழைக்கப்படுகின்றோம்? கடவுள் தூயவராக உள்ளபடியால், அவர் பிள்ளைகள் தூய்மையாக அழைக்கப்படுகிறார்கள். தூய்மையான உள்ளத்தோரால் மட்டுமே, கடவுளைக் காண முடியும். தூய்மை ஒரு நிலையல்ல, அது ஒரு பயணம். ஒருவர் தூயவராக வாழ, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அசுத்தமான வாழ்வு, தற்காலிக இன்பத்தை தருவது போல தோன்றலாம், ஆனால், தூய்மையான வாழ்வுதான் உண்மையான மகிழ்ச்சியை தரவல்லது.
தவக்காலம், தூய்மையான வாழ்விற்கான ஒரு காலம். நாம், நம் வாழ்வின் அசுத்தங்களையும், அதன் ஆபத்துக்களையும், பற்றி சிந்திக்கும் காலம். சிலவேளைகளில், அசுத்தமான வாழ்வை வாழ்ந்து பழகிவிட்டிருக்கலாம். நமக்கு தெரியாது என்பதற்காக அசுத்தம் சுத்தமாகாது. நம் பாராட்டவில்லை என்பதற்காக, சுத்தம் அதன் பெறுமையை இழக்காது.
கடவுளைக் காண தூய்மையான உள்ளத்தை கேட்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக