ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் வாரம் மறையுரை சிந்தனைகள்:
இறையரசு, விண்ணரசு
(கடந்த வாரம் முன்னுரையில் எழுதப்பட்டது)
முதல் ஏற்பாட்டில் இறையரசு:
முதல் ஏற்பாட்டில் ஒரே கடவுள் நம்பிக்கையை, பல கடவுள் நம்பிக்கை சதாரணமாக இருந்த சூழலில் தக்க வைக்க, மிகவே போராடினார்கள். இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் தங்கள் அரசர்களின் ஆட்சி வானத்திலிருக்கும் தங்கள் தெய்வங்களின் அடையாளம் என கருதினார்கள். வானத்தில் நல்ல தெய்வங்கள், தீய தெய்வங்களை வென்று நல்லாட்சிகளை நடத்துகிறார்கள் அதன் வெளிப்பாடுதான் மண்ணக அரசு என நம்பினார்கள். இந்த தெய்வங்கள்தான் மண்ணகத்தை உருவாக்கினார்கள் அத்தோடு அவர்கள் ஒவ்வொரு வருடமும் மண்ணகத்தை வளப்படுத்துகிறார்கள் எனவும் நம்பினார்கள். இதால், மண்ணகத்தில் இராணுவங்கள் சண்டைபோடுகின்ற போது அவர்கள் தங்கள் அரசர்களுக்காக மட்டுமல்ல, மாறாக வானகத்திலுள்ள தங்கள் தெய்வங்களுக்காகவும் போராடுகிறார்கள் என இவர்கள் நம்பினார்கள். மண்ணக வெற்றியோ அல்லது தோல்வியோ, அந்தந்த தெய்வங்களின் தோல்விகள் அல்லது வெற்றிகள் என கருதப்பட்டன.
எபிரேயர்களுடைய இறையரசு (மல்கோத் அதோனாய்) என்ற சிந்தனை கானானிய மற்றும் மொசப்தேமிய சிந்தனைகளை உள்வாங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களுடைய சிந்தனை வியக்கத்தக்க வகையில் மிகவும் இறையியல் ஆழமுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட கானான் நாடு, அவர்கள் கடவுளின் வல்லமையின் அடையாளம் என்பதையும், அதனைக் கொடுக்க அவர் பொய்த் தெய்வங்களை இல்லாமல் ஆக்கினார் என்றும் நம்பினர். இது மற்றயவர்களுடைய நம்பிக்கையிலும் சற்று வித்தியாசப்படுகிறது. அதாவது இஸ்ராயேலின் கடவுள் பூமியை உருவாக்கினவர் மட்டுமல்ல மாறாக அவர்தான் அனைத்தையும் தீர்மானிக்கறவர் என்பதையும் இது காட்டுகிறது. கடவுள் முழு உலகத்தையும் படைத்தார் எனினும், ஆபிரகாம் என்ற ஒரு தனி மனிதர் தன்னுடைய விசுவாச கீழ்படிதலால் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் கானான் நாட்டையும் பெற்றுக்கொன்டார் என்பதும் பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை. இதே வேளை இஸ்ராயேலின் கடவுளின் ஆட்சி கானான் நாட்டிற்கு மட்டும் உட்பட்டதல்ல, மாறாக அது வடக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, என அனைத்து உலகையும் ஆட்கொள்கிறது என்பதையும் அவர்கள் நம்பினார். இந்த சிந்தனை திருப்பாடல் ஆசிரியரால் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். விடுதலைப் பயணம் என்ற அனுபவும் இந்த இறையாட்சியுடன் ஒப்பிட்டு நேக்கப்பட வேண்டும். பாரவோன் என்கின்ற மனித மன்னன், அல்லது அவனது தெய்வங்கள், இஸ்ராயேலின் கடவுளால் தோற்றகடிக்கப்பட்டன. இதனால்தான் அவர் இஸ்ராயேல் மக்களை வெளியே கொணர்ந்து, செங்கடலை கடக்க வைத்து, உடன்படிக்கை செய்த வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியமர்த்துகிறார். இஸ்ராயேலரின் இந்த தனிப்பட்ட இறையியல், சவுல் மற்றும் தாவீது போன்ற அரச வம்சங்களின் வருகையுடன், சற்று மாற்றமடைகிறது. சாதரணமாக இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு கடவுளைத்தான் அரசராக ஏற்றுக்கொண்டார்கள். இதனால் அதிகமான விவிலிய ஆசிரியர்கள் சவுலையும், தாவீதையும் அரசர்களாக ஏற்றுக்கொள்வதில் அல்லது அவர்களை விவரிப்பததில் வித்தியாசம் காட்டுகிறார்கள். இந்த மனித அரசர்களின் தோற்றம் ஆபத்தானது, பிழையானது மற்றும் தேவையில்லாதது என்பதையும் காட்டுகின்றனர் (காண்க 2சாமுவேல் 7: 1அரசர் 9). இந்த சிந்தனையும் மெது மெதுவாக மாற்றம் பெறுகிறது. சில புத்தகங்கள் தாவீதை கடவுளுடைய பணியாளர் அல்லது மகனாக காட்டி உண்மையான அரசர் கடவுள் எனவும் காட்டுகின்றனர்.
ஏற்பாட்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இறையரசு:
அரசர்களின் தோல்வியும், அடிமை வாழ்வும், பபிலோனிய நாடுகடத்தலும், இஸ்ராயேலர்களின்
இறையியலில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. ஆண்டவர் தாவீதிற்கு, அவரின் அரசும் வாரிசும் அழிந்து போகாது என்று வாக்களித்திருந்தார். இப்படியிருக்க எப்படி அவர் சந்ததி அழியலாம்? என்ற கேள்வி பலமாக விவாதிக்கப்பட்டது. தாவீதின் நிலையான அரச வம்சம்தான் கடவுளின் அழிக்க முடியாத அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டபடியால், இந்த இழப்புக்கள் கடவுளின் வார்த்தையையே கேள்வியாக்கிறதோ, என்றும் எண்ணினார்கள். இந்த காலத்தில் தோன்றிய ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் புத்தகங்கள், கடவுளுடைய அரசோ அல்லது ஆட்சியோ மண்ணக அரசர்கள் மற்றும் நிலங்களில் தங்கியிருப்பதில்லை. மாறாக அது மண்ணக அரசர்கள் மற்றும் நாடுகளையும் தாண்டியது என்கிறார்கள். இஸ்ராயேலின், கடவுளின் ஆட்சி என்பதை இவர்கள் முனணிருத்துகிறார்கள்.
தாவீதுடைய வம்சாவளியின் தோல்வியோ, இடப்பெயர்வோ இஸ்ராயேல் கடவுளை
ஒன்றும் செய்ய முடியாது, மாறாக அவர்தான் இந்த தண்டனைகளை அனுமதித்திருக்கிறார் என்ற புதிய செய்தியை அவர்கள் முன்வைத்தார்கள். ஒரு அரசரோ அல்லது அரசாட்சியோ நிலைக்க வேண்டும் என்றால், அவர்கள் கடவுளின் வார்த்தையை கேட்டு அதற்கு ஏற்ப வாழ வேண்டும், இல்லாவிடில் அழிவார்கள, என்பதையும் அனுபவத்தைக் கொண்டு விளக்கப்பட்டது.
இந்த காலத்தில்தான் இறுதிக்கால சிந்தனைகள் முதன் முதலாக இஸ்ராயேலருக்கு வழக்கில் வந்தன. அதாவது இறுதிக்காலத்தில் இஸ்ராயேலின் அரசர் முழு உலகையும் தனதாக்கப்போகிறார், அது கடவுளின் நாள் எனப்படும், அந்நாளில் அனைத்து நாடுகளுக்கும் அவர் தீர்ப்பளிப்பார் என்ற சிந்தனையும் வருகிறது. பின்னர் அவர் யூதேயாவையும், தாவீதின் அரசாட்சியையும் என்றென்றைக்கும் நிலைநிறுத்தப் போகிறார் என்ற சிந்தனையும் உருவாகின. இந்த சிந்தனையுன் மெசியாவின் வருகையும் உருவானது. இந்த மெசியா, அபிசேகம் செய்யப்பட்டவர் அவர்தான் கடவுளின் அரசை நிறுவப்போகிறவர் என்று ஆழமாக நம்பப்பட்டது. கடவுளின் எதிரிகள்தான் யூதேயாவின் அல்லது இஸ்ராயேலின் எதிரிகள் என்றும் அவர்களுக்கு இந்த மெசியா தண்டனை அளிப்பார் என்றும் காத்திருக்க தொடங்கினர்.
இறையரசுதான் மெசியாவின் அரசு அதனை அவர் கானானில் தொடங்குவார், அங்கு அடாத்தாக குடியிருப்பவர்களை அவர் விரட்டுவார், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதையும் இக்கால புத்தகங்கள் காட்டுகின்றன.
புதிய ஏற்பாட்டு காலத்தில் இறையரசு:
இஸ்ராயேலருடைய இறையரசு பற்றிய சிந்தனைக்கு, இஸ்ராயேலில் உரோமையரின் ஆட்சி மிகவும்
இடைஞ்சலாக இருந்தது. இதனை எதிர்க்கவே மக்கபேயர் பல யுத்தங்களைச் செய்தனர். மக்கபேயருடைய சண்டைகள் முதலில் கிரேக்கர்களுக்கு எதிராக இருந்து பின்னர் உரோமையர்களுக்கு எதிராகவும் இருந்தது. சந்தர்ப்பத்தை சாதகமாக பாவித்த எரோதியர் குடும்பம், உரோமையரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றி, சீசரை ஏற்றுக்கொண்டு அரசாள தொடங்கினர். எரோது தாவீதின் வழிமரபில் வராத முழுமையில்லாத ஒரு யூதன். இந்த நிகழ்வுகளும் யூதர்களின் இறையரசு மற்றும் கடவுளின் அதிகாரம் என்பதில் பல கேள்விகளை எழுப்பின. இந்த நிகழ்வுகள் ஆண்டவருடைய நாள் மற்றும் இறுதி தண்டனை என்ற சிந்தனையை வேகப்படுத்தின. இயேசு ஆண்டவர் பணிவாழ்வை தொடங்கிய காலத்தில், இறுதி நாள் பற்றிய சிந்தனைகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்திருந்தன. சீசருடைய ஆதிக்கம் பாலஸ்தீனாவை மட்டுமல்ல அதிகமான மத்திய கிழக்கு பிரதேசங்களை ஆட்கொள்ள முயன்ற வேளை, பல உரோமைய மாகாணங்கள் சீசரை அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி கடவுளாக பார்க்க முயன்றனர். இது இஸ்ராயேலருக்கு பெரிய சவால். கடவுளால் மட்டும்தான் இந்த உரோமைய ஆதிக்கத்தில் இருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டையும், கடவுளின் சொந்த மக்களையும் காக்க முடியும் என்ற சிந்தனை வளர்ந்தது.
இப்படியான காலப்பகுதியில்தான் திருமுழுக்கு யோவான் வந்து இறையரசு வந்துவிட்டது மற்றும் மெசியா வந்துகொண்டிருக்கிறார் என்று முழங்கினார். இது யூதர்களின் இதயங்களை கவர்ந்தது, புருவங்களை உயர்த்தியது. உடனடியாக இயேசு பொதுவில் தோன்றி நேரம் வந்துவிட்டது, இறையரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று போதிக்க தொடங்கினார். இயேசுவின் போதனைகளில் இறையரசு மத்திய செய்தியாக அமைந்தது. அனைத்து செய்திகளும் இந்த மையச் செய்தியை சுற்றியே அமைக்கப்பட்டன. இதன் காரணமாக இயேசு அனைவரினதும் அவதானங்களை ஈர்த்தார். இந்த இறையரசை அமைப்பது மெசியாவின் கடமை மட்டுமல்ல அனைவரினதும் என்று சொல்லி விசுவாசத்தில் கீழ்ப்படிவை எதிர்பார்த்தார். இயேசுவுடைய போதனையுடன் இறையரசு என்பது முழுமையான ஒரு ஆன்மீக அரசு என்ற அடையாளத்தை பெறுகிறது. இதனை சில ஆய்வாளர்கள் எதிர்கிறார்கள் சிலர் ஆதரிக்கிறார்கள். யூதர்களுடையதும் கிறிஸ்தவர்களுடையதும் இறையரசு சிந்தனை இந்த இடத்துடன் இரண்டு விதமான பாதைகளில் செல்லத் தொடங்குகின்றது.இயேசுவுடைய அநேகமான உவமைகள் இறையரசை தன் மக்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்ச்சிதான். இந்த உவமைகள் சாதாரண எளியவர்களின் நாளாந்த கதைகளாக இருந்த படியால் அதிகமானவர்களால் இலகுவாக புரியப்பட்டன. ஆண்டவருடைய உயிர்ப்பிற்குப் பின்னர், அவருடைய இரண்டாம் வருகைதான் இறையரசின் நிறைவு என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டவருடைய இரண்டாம் வருகை காலம் தாழ்த்தவும், அதனை பற்றி சரியான நேரக்கணிப்புக்களை கொடுக்க முடியாமல் போகவும், புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதனை கணிக்க முடியாது என்கின்றனர்.
முடிவாக, இறையரசு என்கின்ற சிந்தனை இன்றுவரை விவிலிய ஆய்வாளர்களின் தூக்கத்தை கலைக்கும் முக்கியமான சிந்தனையாக இருக்கிறது. இருப்பினும் இயேசுவுடைய பிறப்பின்போதே இறையரசு ஏற்கனவே முழுமையாக நிறைவேறிவிட்டது என்று சில கிறிஸ்தவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இப்பபோதைய தேவை, தனிப்பட்டவர்களின் மீட்பு மட்டுமே என்றும் வாதிடுகின்றனர்.
அ. புதையல்:
நிலத்திற்கு கீழுள்ள அனைத்தும் அரசிற்கு சொந்தம் என்பது ஒரு சட்டம். இதனால் நிலத்திற்கு கீழுள்ள புதையல்களும் அரசிற்கு சொந்தம். இந்த காலத்தில் அரசுகள் மக்களுக்கு சொந்தம் என்பதால் புதையல்கள் மக்களுடைய சொத்தாக மாறும் என்ற ஒரு நம்பிக்கை. பல வளர்ந்த நாடுகளில் இது சாத்தியம். பல அதிகமான ஆசிய மற்றும் அதிகமான ஆபிரிக்க நாடுகளில் அரசருடைய அரசானாலும் சரி, மக்களுடைய அரசானாலும் அவர்கள் புதையல்களை தங்கள் பரம்பரைக்குத்தான் சேர்த்துக்கொள்வார்கள்.
இயேசுவுடைய காலத்தில் புதையல்கள் காரணத்தால், பல வன்முறைகளும், போர்களும் நடைபெறும். இதன் காரணமாக புதையல் ஒரு புறத்தில் புதையல் பெறுமதியாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் இது ஆபத்தாக அமைகிறது. புதையலை கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதனை பாதுகாக்கவும், உரிமையாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் புத்திசாலி. இறையரசும் அப்படித்தான், அதனை கவனமாக கையாளாவிட்டால், வேறு எவராவது கொண்டுபோய்விடுவார்கள். சிந்தனையில் இருக்கும் அல்லது படத்தில் இருக்கும் புதையலால் என்ன பயன்? அதனைப் போலவே விண்ணரசும். அது வீட்டிற்குள் கொண்டுவரப்படவேண்டும். கட்டுரைகளிலும், சிந்தனையிலும் மட்டுமே இருக்கும் விண்ணரசு சிந்தனைகளால் என்ன பயன்?
ஆ. முத்து:
முத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. விலையுயர்ந்த முத்தை கண்டுபிடிக்கிறவர் அதனை பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறார். சிலர் முத்தை கௌரவத்திற்காக வைத்திருக்க விரும்புகிறார்கள். முத்துக்கள் சொத்துக்கள். வெறுமனே முத்தை அழகிற்காக வைத்திருந்து என்ன பயன்? முத்துக்களை சேர்த்து வைத்திருந்து பல தலைமுறைக்கு ஏழைகளாகவே இருக்கலாம். ஆனால் முத்தை பயன்படுத்தி தன் ஏழ்மையை தாண்டுகிறவர்தான் உண்மையான அறிவாளி.
இ. வலை:
வலைகளின் அமைப்புகள், இயல்புகள், போன்றவற்றைக்கொண்டு, அவற்றின் தகமைகள் வெளிப்படுகின்றன. எல்லா வலைகளிலும் எல்லா மீன்களையும் பிடிக்க முடியாது. உயர்தரமான வலையில்தான் உயர்தரமான மீன்கள் பிடிபடுகின்றன. சில வேளைகளில் சாதாரண வலைகளில் கூட பெறுமதியான மீன்கள் படிபடுவதுண்டு. பெறுமதியான வலைகளைக் கொண்டு பெறுமதியான மீன்களைக் பிடிக்கமுடியவில்லை என்றால், வலைகளால் என்ன பயன். வலைகள் அல்ல, மீன்களே எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன எனலாம். இருந்தாலும் வலைகளின் தகமைகள் மிக முக்கியம்தான். இறையரசு என்கின்ற வலை பாதுகாக்கப்படவேண்டும், நல்ல மீன்களும் பிடிபட வேண்டும்.
விண்ணரசு ஒரு தேடல்,
தொடங்கிவிட்டது, ஆனால் நிறைவுபெறவில்லை.
ஒவ்வொரு விசுவாசியும் விண்ணரசின் பங்காளியாகலாம்.
இயேசுதான் இந்த விண்ணரசு தரும் புதையலும், முத்தும்.
உலக புதையலும், முத்தும் அரசாங்கத்துடையது.
பல அரசுகள் அதனைத் தேடி நாடுகளைக் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள்.
ஆனால் இயேசு என்கின்ற இந்த புதையலும் முத்தும்,
யாராலும் கொள்ளையடிக்கப்பட முடியாதது.
விலைமதிப்பற்றது.
விற்க முடியாதது, ஆனால்
வாங்க முடியுமானது.
ஆண்டவரே உம்மை பற்றிக் கொள்ள வரம் தாரும், ஆமென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக