ஆண்டின் பொதுக்காலம் 15ம் வாரம், அ.
12.07.2020
விதைப்பவர் உவமை: மத்தேயு 13,1-23
நம் ஆண்டவர் இயேசு இஸ்ராயேல் மக்களுக்கு நன்கு தெரிந்த உவமைகள் நிகழ்வுகள் வாயிலாக அழகாக பேசும் தலைசிறந்த ஆசிரியர். இன்றைய நற்செய்தியில் அவர் நிலத்தின் விதைக்கப்படும் விதைகளை உருவகமாக எடுக்கிறார். இயேசு இந்த உவமையை சொல்ல தெரிந்தெடுக்கின்ற இடம் கலிலேயக் கடற்கரை. இது கடல் என்பதைவிட இதனை ஒரு ஏரியாகத்தான் எடுக்க வேண்டும். இந்த பகுதியில் இருந்த அதிகமான மக்கள் அந்த ஏரிக்கரையை சார்ந்த மீனவர்கள் எனவும் எடுக்கலாம். இருந்தாலும் அவர் விதைகளைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் நன்கு பேசுகின்ற போது, அவர்களுக்கும் அது நன்கு புரிந்துவிடுகிறது. இதிலிருந்து செய்யும் தொழில் ஒருவருடைய முழுமையான அடையாளம் அல்ல மாறாக அது வெறும் தொழில்தான். தொழில் நம் அடையாளத்தை தீர்மானிக்காது, நாம் தான் தொழிலையும் அதன் அடையாளத்தையும் தீர்மாணிக்க வேண்டும். தொழிலை மையமாகக் கொண்டு வர்க்கப்பாகுபாடு காட்டி அதற்கு பல வரலாற்று அடையாளங்களைக் கொடுக்க முயலும் மதிகெட்டவர்களை எவ்வளவு காலத்திற்குத்தான் சகித்துக்கொள்ள முடியும். பாவம் அவர்களும் இந்த உலகமும்.
அ. விதைப்பவர் ஒருவர்தான் அவர் விதைப்பதும் நல்ல விதைகளைத்தான்:
கடவுள் ஒருவர், அவர் படைக்கும் அனைவரும் இயற்கையாக நல்லவர்கள்தான். அவர்களில் எந்த பாகுபாடும் கிடையாது. விதைகளில் வித்தியாசம் இல்லை. வளரக்கூடிய நிலையையும், தன்மையையும் விதைகள் கொண்டிருக்கின்றன. கடவுளும் அப்படியே. கடவுள் தன் பிள்ளைகளை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று படைத்தால், அவரும் நிறைவில்லாதவர்தான். நம் கடவுள் அப்படியிருக்க முடியாது. நாம் கடவுளை பாகுபாடு காட்டுகிறவராக கண்டால் அந்த கடவுள் உண்மையான கடவுள் அல்ல, அந்த கடவுள் நமக்கு வேண்டாம்.
ஆ. அவர் விதைக்கும் போது சில விதைகள் வழியோரம் விழுந்துவிட்டன:
வழியோரம் விதைப்பது அவர் நோக்கமல்ல. அவர் விதைக்க நினைத்த இடத்தில் இவை விழாததால் அல்லது விரும்பாததால், அவை ஏற்பில்லாத இடத்தில் விழுந்துவிட்டன. இதனால்தான் பறவைகளுக்கு இரையாகிவிட்டன. நம் வாழ்வும் ஆண்டவருக்கு ஏற்புடைய இடத்தில் விழாவிட்டால், பறவைகளைப் போல ஆபத்துகள் நம்மை இரையாக்கும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
இ. மண்ணில்லாப் பாறைப் பகுதியில் சில விதைகள் விழுகின்றன:
மண் நிலத்தின் நல்ல அடையாளம். மண்ணின் தன்மைதான் அதனை சுற்றியிருக்கின்ற இயற்கையை தீர்மாணிக்கின்றது. பாறைகளுக்கு வலிமை அதிகம், ஆனால் மண்ணுக்குத்தான் மவுசு அதிகம். மண் உள்ள நிலத்தைதான் மனிதர்களும் விலங்குகளும் அதிகமான தேடுகிறார்கள். பாறையில் விதைகள் விரைவாக முளைக்கும் அதே வேகத்தில் அவை இறந்தும் போகும். வேகம் அல்ல நிதானம்தான் ஒருவரின் வாழ்வை தீர்மாணிக்கிறது. இந்த உலகம் வேகத்தைதான் விழுமியமாக காட்டப்பார்க்கிறது. விரைவு உணவு, விரைவுக் கல்வி, விரைவுச் சாலை, விரைவுத் திருமணம் என்று சொல்லி, இறுதியாக மரணத்தையும் விரைவாக வரவழைக்கிறது. வேகத்தில் என்ன கலாச்சாரம் இருக்கிறது, வேகத்தில் மனிதர் வளர முடியுமா? குழைந்தை பிறக்க பத்துமாதங்கள் தேவை, அதனால் அது நிறைமாத குழந்தையாக பிறக்கும், இல்லாவிட்டால் பிறந்த உடனே அதனை கண்ணாடி பெட்டியினுள் வைத்து, அதன் உயிரைக் காக்க போராட வேண்டிவரும். மெதுவாகச் செல்வோம், மகிழ்வாகச் செல்வோம்.
ஈ. முட்செடிக்குள் விழுந்த விதைகள், வளர்ந்தன ஆனால் நெரிக்கப்பட்டன:
முட்செடிகளும் பயிர்களும் வளரும் போது ஒரேமாதிரியாத்தான் தோன்றுகின்றன. ஆனால் இரண்டின் சுபாவங்களும் வௌ;வேறு. இயல்பு மற்றும் சுபாவம் ஒருவரின் வளர்ச்சியை தீர்மாணிக்கும். முட்செடிகள் கவர்ச்சியாக இருக்கின்ற என்பதற்காக அதனை தூக்கி முத்தமிட முடியுமா. முள்ளு குத்தும், இரத்தம் வரும். முட்கள் ஆபத்தானவை இந்த இடத்தில். சுற்றியிருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் நண்பர்கள் உறிவனர்கள் ஆக முடியுமா. உணவினர்களும் நண்பர்களும் நல்லவர்களாக இல்லாவிடில், அவர்களின் இயல்பும் தன்மையும் நம்மையும் மாற்றிவிடும், ஏன் அழித்தேவிடும். நல்ல நண்பர்களும் நல்ல உறவுகளும்தான் தேவை. ஒன்றில் அவர்களை திருத்த வேண்டும் அல்லது இடத்தை மாற்றவேண்டும். கவர்ச்சி அல்ல, அழகுதான் சிறந்தது.
உ. நல்ல நிலத்தில் விழுந்தால் நல்ல பலன் நிச்சயமாக கிடைக்கும்:
நூறு மடங்கோ, முப்பது மடங்கோ அல்லது அறுபது மடங்கோ ஆண்டவருக்கு முன்னால் எல்லாம் ஒன்றுதான். அப்பாவுக்கு பிள்ளைகள் எல்லாம் ஒன்றுதானே. இவை வெறும் எண்ணிக்கைகள் தான். நூறு மடங்கு பலன்கொடுக்க வேண்டியது நூறு மடங்கு கொடுக்காவிட்டால்தான் சிக்கல், முப்பது மடங்கு கொடுக்க வேண்டியது முப்பது மடங்கும், அறுபது, அறுபது மடங்கும் கொடுக்க வேண்டும். அவரவரால் எதனைக் கொடுக்க முடியுமோ அதனை அவரவர் கொடுக்க வேண்டும். மற்றவரோடு ஒப்பிடாமல், தன்னால் முடியுமானதை ஒருவர் செய்தாலே உலகம் சீராகும்.
ஊ. கேட்கும் செவிகள் வேண்டும்:
செவிகள் இருந்தால் போதுமா? கேட்காத செவிகளால் என்ன பயன். கிறிஸ்தவர்களாக பிறந்தால் போதுமா, கிறிஸ்தவத்தை வாழத கிறிஸ்தவர்களும் நம்பிக்கைற்றவர்கள்தானே? என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பது முக்கியமல்ல மாறாக அவற்றைக் கொண்டு என்ன நன்மைத்தனம் செய்கிறேன் என்பதுதான் முக்கியமும், தேவையுமாகும்.
கேட்கும் செவிகளைக் கேட்போம் ஆண்டவரிடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக