ஆண்டின் பொதுக்காலம் 14ம் ஞாயிறு.
05.07.2020
ஆண்டவர் இன்னொரு வாரத்தை நமக்கு கொடுத்து, ஆசீர்வாதங்களால் நிறைகின்றார். இன்றைய வாசகங்கள் நமக்கு கடவுள் அருளும் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றன. இன்றைய வாசகங்களாக
முதல் வாசகம்: செக்கரியா 9,9-10
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 145
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,9-13
நற்செய்தி: மத்தேயு 11,25-30 புத்தக பகுதிகளிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய முதல் வாசகத்தின் கருப்பொருளாக வருங்கால அரசரின் பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன: இவர் வருகைக்காக எருசலேம் மகிழச் சொல்லி கேட்கப்படுகிறது. அடிமட்ட அரசியல் பணியாளர்கூட, தன்னை தானைத் தளபதியாக நினைக்கும் இக்கால கனவு உலகில், இந்த பிரபஞ்சத்தின் தலைவர் மிக எளிமையாக காட்டப்படுகிறார். அவர் நீதியுள்ளவர் இருந்தாலும் அவர் வெற்றிவேந்தர். எளிமையின் அடையாளமாக கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகிறார். கழுதையை அவமானத்தின் அடையாளமாக பார்க்கும் வீரச் சிந்தனையை நக்கலடிக்கிறார். தேர்ப்படைகள், குதிரைப்படைகள் பலத்தின் அடையாளமாக நாம் சிந்தித்தால், இவர் அவற்றை பயத்தின் அடையாளங்களாக பார்க்கிறார். வேற்றினத்தாருக்கு அச்சத்தை அர்ச்சனையாக்கும் ஆசைபிடித்த அரசியலில், அவர்களுக்கு அமைதியை ஆசீராக்க கேட்கிறார். கடவுள் ஒரு அழகான உலகத்தை படைக்க, மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கண்டங்களையும் நாடுகளையும் படைத்தார்கள். இதனால் கடவுள் படைத்த உறவினர்கள் அந்னியர்களாகிப்போனார்கள். இந்த பிரிவினையில் இருந்து உலகை மீட்கவே, இவர் தன் ஆட்சியை மீண்டும் உலகின் அனைத்து எல்லைகளிலும் நிறுவுகிறார் போல.
சாராயக்கடையில் கிடைக்கும் 500 ரூபாய் பியர் போத்தல்கள், 'உனக்குள் உள்ள சிங்கத்தை தட்டி எழுப்பு' என்று உசுப்பேத்தும் இந்த சமூதாயத்தில், பவுல் உனக்குள் உள்ள தூய ஆவியானவரை மறவாதே என்ற உண்மையை சொல்கிறார். ஊனியல்பு ஒன்றும் சாதாரண இயல்பல்ல, அது கவர்ச்சியானது, அதிகமான ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளது, இதற்குத்தான் மவுசு அதிகம் போல. பலருக்கு தூய ஆவிக்குள் வாழ்வு, இறந்த கால சிந்தனைபோல தெரிகிறது. மரணத்தை பார்த்து பயப்படும் இந்த உலகம், ஏன் மரணத்தை நோக்கித்தான் தன்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்வை கொடுத்து உயிர்ப்பையும் கொடுக்கும் ஆண்டவர் ஏனோ அதற்கு தெரியவில்லை, அவர் அதிகமாக விரும்பப்படுகிறாரும் இல்லை. கடவுளை 'அப்பா தந்தையே' என அழைப்பவர்களை, தூய ஆவியின் மக்கள் என்கிறார் பவுல், ஆனால் இதனை உணராமல் வாயில் மட்டுமே கடவுளை அப்பா தந்தையே என அழைக்கிறவர்களை அவர் சொல்லவில்லை.
மத்தேயுவின் இன்றைய நற்செய்தியில் அழகான சில கருத்தியல்களைக் காணலாம்:
அ. கடவுள்தான் தந்தை, அத்தோடு அவர்தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர் -
தந்தையருக்கு வரைவிலக்கணம் கடவுள் என எடுக்கலாம். தந்தைகள் உருவாக்கிறவர்கள், பாதுகாக்கிறவர்கள். ஆனால் இந்த உலக்கின் சிந்தாந்தங்கள், தந்தையர்களை கவர்ச்சியானவர்களாக, சினிமா பாணியிலான கதாநாயகர்களாக, பயமுறுத்துகிறவர்களாக, பணம் சுரக்கும் இயந்திரங்களாக, உணர்வற்றவர்களாக, காட்ட முயல்கிறது. கடவுள் ஒரு அழகான தந்தை அனுபவம். கடவுளை பரலோகத்திற்கு மட்டும் உரியவர் எனக் கருதி, பூலோகத்தில் எப்படியான வாழ்க்கை முறையையும் வாழலாம் என நினைத்தால், அது மகிவும் ஆபத்தாக முடியும். அது வெறும் மூட நம்பிக்கைதான். மண்ணக வாழ்வு விண்ணகத்தை நோக்கியிருக்க வேண்டும், விண்ணக வாழ்வு, மண்ணகத்தில் தொடங்க வேண்டும், எனெனில் கடவுள்தான் இரண்டுக்கும் தந்தையாக இருக்கிறார்.
ஆ. ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் வாய்ப்பில்லை -
ஞானிகள்-அறிஞர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்துகிறவர்கள் உண்மையில், அப்படியாக இருக்க முடியாது. தன்னை அறிபவரே ஞானி என்கிறார் சோக்கிரடீஸ், தன்னை அறிகிறவர், ஒரு நாளும் தன்னை அறிஞராகவே அல்லது ஞானியாகவோ முன்னிறுத்த மாட்டார். ஏனெனில் ஞானமும் அறிவும் கடவுளின் கொடை, அதனை பெற்றவர் எப்போதும் தாழ்ச்சியுள்ளவராக இருப்பார். இந்த உலகில் ஞானிகளும் அறிஞர்களும் பெருகிவிட்டார்கள் போல, அதானல் மூட நம்பிக்கையும், வன்முறைக் கலாச்சாரமும் ஆட்சி செலுத்துகிறது.
இயேசு குழுந்தைகளை ஞானிகளும் அறிஞர்களும் என்கிறார். ஏனெனில் இவர்களுக்குத்தான் இந்த உலகின் நிலையாமை தெரிந்திருக்கிறது. அவர்கள்தான் நிகழ்காலத்தில் வாழ்கிறவர்கள். அவர்களால்தான் உண்மையை உள்ளபடியே சொல்ல முடிகிறது. கடவுள் வெளிபப்டுத்துகிறார், கடவுள் என்னோடு மட்டும்தான் பேசுகிறார், அவர் என் கனவில் உன்னைப் பற்றிச் சொன்னால், உன்வீட்டில் பில்லி சுனியம் இருக்கிறது, யாரோ கட்டிவைத்திருக்கிறார்கள், யாரோ செய்வினை செய்துள்ளார்கள் என்று சொல்லும் 'ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும்' பின்னால் செல்லும் இந்த உலகம் 'சரி சரி எல்லாம் சரியாயிடும், அழாதீங்க, அப்பாட்ட சொல்லி வாங்கித்தாரேன், கடவுள் பாத்திப்பார்' என்று சொல்லும் குழந்தை ஞானத்தையும், அறிவையும் துய்த்துரண முடியவில்லை. இவ்வுலக ஞானிகளும் அறிவாளிகளும் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள், இந்த உலகம் அவர்களை ஞானிகள் அறிவாளிகள் என்று ஏற்கும் வரை. பிழைகள் அவர்களுடயவை மட்டும் அல்ல. சூனியங்களை கண்டுபிடிக்கும் அறிவாளிகளால், ஏன் அவற்றை அழிக்க முடியவில்லை என்பது மட்டும் தெரியவில்லை, பேய்களை ஓட்டுவதாக சொல்லும் அறிவாளிகள் ஏன் பேய்களைவிட பயங்கரமாக வாழகிறார்கள் என்பது மட்டும் ஏனக்கு புரியவில்லை.
இ. மகனின்றி வெளிப்பாடில்லை -
இயேசுவை சிலையிலும், புத்தகத்திலும், படங்களிலும் பார்க்க மனம் விரும்புகிறது, ஆனால் அவரை ஏனோ வாழ்வில் வாழ தயங்குகிறது. இயேசு ஆயுதம் ஏந்தாத, பழிவாங்காத, அழிக்காத, பயமுறுத்தாத, வர்க்க பிரிவினை சொல்லாத, பிரதேசவாதம் காட்டாத, மொழிவாதம் போதிக்காத, பாலினம் பாராட்டாத கடவுள். அவர் இதிகாசங்களையோ, புராணங்களையோ, கதைகளையோ, கவிதைகளையோ எழுதிவிட்டுபோகவில்லை. அவர் எழுதியது ஒருமுறை நிலத்தில் மட்டும்தான், அதுவும் ஒரு பெண்ணைக் காக்கவே. அவர் எந்த பல்கலையிலும் கற்கவில்லை, பல்மொழிகளும் பேசவில்லை, நூறாண்டுகள் வாழவுமில்லை. இருந்தாலும் அவர் ஒருவர்தான் கடவுளின் உண்மையான வெளிப்பாடு. அவர் சொல்லும் வெளிப்பாடு மகிவும் தெளிவாக இருப்பதால்- வெளிப்பாடுகள் தெளிவாக இருக்கக்கூடாது என்பதற்காகவே, பலர் அவரையும் தெளிவில்லாமல் ஆக்குகின்றார்கள்.
ஈ. பெருஞ்சுமை சுமந்து சேர்ந்திருப்பவர்கள் -
சுமைவந்தாலே சோர்வு வரும், அதுவும் பெருஞ்சுமை வந்தால் பேர் சேர்வு வரும். ஆனால், சுமைகள் சோர்வைக் கொண்டு வராது என்று ஆண்டவர் சொல்வது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆம் சேயைக் காணும் தாயின் முகம் பிரசவ வலியை மறந்துவிடுகிறது, மகளின் சிரிப்பைக் காணும் தந்தையின் தோள்கள், கடன்சுமையை கண்டும் வீரம் கொள்கிறது. சுமைகள் சோர்வைத்தான் கொடுக்கும் என்பது எல்லாருக்கும் பொருந்தாது. அத்தோடு அது இயேசுவின் சீடர்களுக்கு நிச்சயமாக பொருந்தாது.
உ. அழுத்தாத நுகம் -
நுகம் என்றாலே அடிமைத்தனம் என நினைக்கிறோம். நுகத்தின் அடையாளம் ஆழத்துதல் என என்னலாம். உண்மையிலே விலங்குகளுக்கு பாரம் அழுத்தக்கூடாது என்பதற்காகவே, நுகம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஆச்சரியமான சத்தியம். சிலுவையை சிலர், துன்பத்தின் அடையாளமாக, தண்டனையின் வடிவாக பார்க்கிறார், அவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்காக அது உண்மையாகது. சிலுவை மீட்பின் அடையாளம், நுகம் பாரத்தை குறைக்கும் அறிவின் அடையாளம். இயேசுவின் நுகம், இனிமையான பாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக