ஞாயிறு, 23 ஜூலை, 2017

மாவீரர் (War Hero)

 

மாவீரர் (War Hero)

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் யாழ்பாணத்தின் மிக முக்கியமான வணக்க ஸ்தலத்திற்கு முன்னால் நடந்த ஒரு கொலை முயற்சி அனைவரது மனங்களையும் கணமாக்கியிருக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்கள், மொழியால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் மற்றும் மதங்களால் வேறுபட்டது, ஆனால் மனிதத்தால், உணர்வால், அன்பால் ஒன்றுபட்டது என்பதை ஒரு வீரமகன் தன் மரணத்தால், மேலும் சொன்னால் தன் உயிர் தியாகத்தால் நினைவூட்டிவிட்டார். மரணம், கொலை, பயமுறுத்தல், கடத்தல், துஸ்பிரயோகங்கள் போன்றவற்றை, மனிதர் (நல்ல) வெறுக்கின்றனர். அவர்கள் யாராக இருந்தாலும் வெறுக்கின்றனர் என்பதை இந்த தென்னாட்டு சகோதரனின், வடநாட்டு சகோதரனுக்கான உயிர்தியாகம் காட்டிவிட்டது. நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர், பதினேழு வருடங்கள் நீதிபதியின் காவலராக இருந்திருக்கிறார். பலவேளைகளில் நீதிபதியின் உணவை அவரோடு அருந்தியிருப்பார். தொழில்களில் இருவரும் வேறுபட்டவர்களாக இருந்தாலும், நோக்கத்தில் ஒருவராகவே இருக்கின்றனர். ஒருவர் சட்டத்தை காக்கும் காவலர், மற்றவர் சட்டத்தை நிறுத்தும் நீதிமான். இவர்கள் குணத்தாலும் பணியாலும் நண்பர்கள். தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை என்பதை இயேசு நினைவூட்டுவது இங்கே நினைவிற்கு வருகிறது
இறந்தவர் ஐம்பத்தோரு அகவையை பூர்த்தி செய்தவர் எனச் சொல்லப்படுகிறது. மிகவும் வறிய குடும்பத்தின் தலைவர் எனவும், இரண்டு பிள்ளைகளின் தகப்பன் எனவும் சொல்லப்படுகிறது
இன்று அவர் தன் பணிக்காக உயிர்நீத்து தன் குடும்பத்தை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்
இவருடைய பிரிவைக்கண்டு நீதிபதி சிந்திய கண்ணீரும் வெகுவாக பலருடைய கல்லான 
இதயங்களை நனைத்திருக்கிறது. இந்த வீர மரணத்திலிருந்து இலங்கை சமுதாயம் முக்கியமாக தமிழ்ச் சமுதாயம் என்ன கற்கப்போகிறது? இரண்டு சமுதாயங்களிலும் சதாரண மக்கள், மக்களாகவே இருக்கிறார்கள். மாவீரர்களாக பிறந்து மாவீரர்களாகவே மரிக்கிறார்கள். இதயங்களும், ஆனமாக்களும் சந்திக்கின்றபோது, மற்றவரின் வேதனை அப்படியே அறியப்படுகிறது. இதனால்தான் வார்த்தைகளைவிட கண்ணீர் முதலில் வருகிறது
இன்றைய வாசகங்களில் புளிப்பு மாவையும், கடுகு விதையையும் இயேசு ஆண்டவர் விண்ணரசின் தன்மைகளுக்கு ஒப்பிடுகிறார் (காண்க மத்தேயு 13,24-43) . இவை அளவில் சிறியவை, ஆனால் இவற்றின் பலம் பல ஆயிரம் மடங்கு பெரியவை. இந்த தன்மை அனைவரிடமும் உள்ளது. புரிந்து கொண்டால் நல் உலகை அமைக்கலாம். ஏனோ அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு புரிவதில்லை. இயேசுவோடு சேர்ந்து, கேட்கச் செவி உள்ளோர் கேட்கட்டும். 
தென்நாட்டு சகோதர-நண்பருக்கு, 'போய் வாங்க! நீங்க சிந்தின ரத்தமும், நம்மட ரத்தம் தோஞ்ச நிலத்தின் விதையாகட்டும்'. இன்று யூலை பதின்மூன்றாம் நாள், இதன் வலிகளையும் வரலாறு மறக்காது. உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும், உங்கள் கனவுகளுக்காகவும் ஆண்டவரை பிராத்திக்கின்றேன்
நாளைய  நாள் நல்லநாளாக அமையட்டும்

மி. ஜெகன்குமார் அமதி
பேசாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...