செவ்வாய், 25 ஜூலை, 2017
மறைசாட்சி (martyr)
யார் மறைசாட்சி? தன்னுடைய நம்பிக்கைக்கு சாட்சியம் சொல்கிறவர், தன் நம்பிக்கையை முதலில் வாழ்கிறவர். தன் மறைக்காக எதையும் இழக்க ஆயத்தமாக இருக்கிறவர். திருச்சபையில் இலட்சக் கணக்கான மறைசாட்சியர்கள் தோன்றியிருக்கிறார்கள். இன்று நாம் அனுபவிக்கும் விசுவாச பாரம்பரியங்கள் அவர்களால் தரப்பட்டது. அவர்களில் இரத்தம், இன்று நாம் அனுபவிக்கும் விசுவாச நிழல். கிறிஸ்தவத்தில் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலும், வாழ்க்கை முறைகளிலும், தத்துவங்களிலும் இந்த மறைசாட்சியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நாட்டிற்க்காக, வீட்டிற்காக, சுதந்திரத்திற்காக, மனித உரிமைகளுக்காக, அன்பிற்காக, காதலுக்காக தம் இன்னுயிரை கொடுத்தவர்களையும் மறைசாட்சியர் என்று பெரியளவில் அழைக்கலாம். சில நாட்களுக்கு முன்னர், தன் நீதிபதிக்காக உயிரைக் கொடுத்த இலங்கை காவல்துறை துணை பரிசோதகர், ஹேமச்சந்திர இந்த வகையினுள் அடங்குவார் என நினைக்கிறேன்.
இன்று திருத்தூதர்களின் முதலாவது மறைசாட்சி பெரிய யாகப்பரின் திருவிழா. இவரை பற்றி பல வரலாறுகளும், புராணக்கதைகளும் புழக்கத்தில் உள்ளன. இவர் திருத்தூதர் யோவானின் மூத்த சகோதரன், இவரை இயேசு பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். இவர் செபதேயு மற்றும் சலோமியின் மகன் என அடையாளப்படுத்துகிறார். இயற்கையாகவே முற்கோபம் உடையவர் என்பதனால் இவரையும் இவரது சகோதரரையும் 'இடியின் மக்கள்' என இயேசு பட்டப் பெயரிட்டார். இவருடைய தாயார் இவர்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசி நன்றாக வாங்கிக் கட்டினார் (மத்தேயு 20,20-28). இருந்தும் இவர்களின் தாயார் இவர்களை இயேசுடம் கொண்டு வந்த நல்ல தாயார் என்பதை மறுக்க முடியாது.
தூய யாக்கோபு, எரோதுவினால் மறைசாட்சியம் அடைவதற்கு முன்னர் இஸ்பெயினின்
இபேரியாவில் வேதம் போதித்தார் என நம்பப்படுகிறது. இவருடைய சாவிற்கு பின்னர் இவரின் உடல் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. பின்நாட்களில் இஸ்பெயினில் உள்ள கம்போஸ்தல்லா என்ற திருத்தலத்திற்கு அது மாற்றம் செய்ய்பபட்டது எனச் சொல்லப்படுகிறது. இந்த கம்போஸ்தல்லா உலகில் அதிகமான திருப்பயணிகளால் தரிசிக்கப்படும் ஒரு முக்கியமான நடந்து செல்லும் வணக்கஸ்தலம்.
இஸ்பெயின் மூர் இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்தபோது, கிட்டத்தட்ட கி.பி 800களில் யாக்கோபு கிறிஸ்தவ வீரர்களுக்கு சார்பாக தோன்றி வெள்ளைப் புரவியில் வந்து, மூர் வீரர்களை அழித்து இஸ்பானியாவிற்கு விடுதலை அளித்தார் என இஸ்பானியாவின் ஒரு பக்கச்சார்பு பாரம்பரியம் நம்புகிறது. இதனால் யாக்கோபு 'மூர் அழிப்பார்' என அறியப்படுகிறார். இஸ்பானிய உள்நாட்டு சொற்களில் மருவல் காரணமாக யாக்கோபு என்ற கிரேக்க-யூத பெயர் சான்-தியாகு என்ற மறுவியிருக்கிறது. இந்த மருவல் நேரடியாக இலத்தின் 'சான்து-யாக்கோபூ' சொல்லிலிருந்து வந்திருக்க வேண்டும். எது எப்படியானினும் இயேசுவோடு மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த பிரசித்தி பெறாத திருத்தூதர் இஸ்பானியாவில் இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக அவர்களின் கலாச்சாரம், மொழிகள், நம்பிக்கையோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் அனைத்து நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகள் என்று சொல்லிவிடமுடியாது. இறந்த பின்னர், இரண்டு நாட்களில் மறக்கப்பட்டும் இந்த அவசர உலகில், இந்த திருத்தூதர் ஆயிரம் ஆண்டுகள் இஸ்பானியாவின் காவலராக வாழ்வது, நமக்கு எதோ சொல்கிறது.
இவர் போரில் மூர் இனத்தவரை அழித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் நாட்டு வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்திருப்பார். இவர் வாள் ஏந்தினாரா இல்லையா என்பது தெரியாது, ஆனால் தன் வாழ்நாளில் இயேசுவை ஏந்தினார், இதனால் தான் ஏரோதின் வாளுக்கு இவர் அஞ்சவில்லை. உலக இன்பங்களுக்காக, உரிமைகளையும், சொந்தங்களையும், அடையாளங்களையும், பாரம்பரிய கொள்கைகளையும், துறக்க ஆயத்தமாக இருக்கும் சுயநல வாதிகளுக்கு யாக்கோபு நல்லதொரு உதாரணம். இதனால் இவரை பெரிய யாக்கோபு என இஸ்பானியர்கள் அழைப்பதில் தவறில்லை.
சாட்சியம் சொல்வோம், நலம் உண்டாகட்டும்.
யாகப்பரின் அனைத்து நண்பர்களுக்கம், திருநாள் வாழ்த்துக்கள்!
மி. ஜெகன்குமார் அமதி
அமைதியகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக