அவரோடிருக்க!
வெள்ளி, 28 ஜூலை, 2017
இன்றைய நாளில் ஆறு குருக்கள் தங்களுடைய குருத்துவத்தின் வெள்ளி விழாவை தூய அந்தோனியார் ஆலயம், மானிப்பாய், யாழ்ப்பாணத்திலே கொண்டாடி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் அமதிகளின் வடமாநில முதல்வர். இன்னொருவர் பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவ கல்லூரியின் வந்து போகும் பேரராசிரியர். இவர் எனக்கு இறையியலில் விவிலியம் கற்றுக்கொடுத்தவர். இன்னொருவர் எங்களுடைய சிறிய குருமடத்தின் முன்னாள் அதிபர். இவர்களுள் நான்குபேர் அமதிகள் இரண்டுபேர் யாழ்மறைமாவட்ட குருக்கள். அதற்கென்ன, அனைவரும் ஆண்டவரின் குருக்களே!
இருபத்தைந்து வருடங்களாக இவர்கள் குருத்துவம் என்ற பாதையிலே நடந்து வந்தவர்கள். இன்று ஆண்டவருக்கு நன்றி செலுத்தியபோது, இவர்களோடு சேர்ந்து இவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என்று பலரும் நன்றி செலுத்தினார்கள். மறையுரையை மன்னார் மறைமாவட்டதின் குரு முதல்வர் அருட் தந்தை விக்டர் சோசை வழங்கிய போது, குருத்துவம் என்பது 'அழைக்கப்பட்டவர் இன்னொரு இயேசுவாக மாற அழைக்கப்படும் அழைப்பு' alter christus என அழகாகச் சொன்னார். சில நாட்களுக்கு முன்னர் அவரும் தன்னுடைய குருத்துவ வெள்ளி விழாவை கொண்டாடியவர்தான்.
இந்த விழா நாயகர்களை வாழத்தச் சென்றபோது, என்னுடைய முன்னாள் போராசியர் என்னைக் கண்டவுடன் சந்தோசத்தில் தன்னுடைய விழாவின் முக்கியத்துவத்தையே மறந்தவராக, 'ஆ வந்திட்டீர், பின்னேரம் பாவசங்கீத்தனம் இருக்கு ஐஞ்சரைக்கு வரனும், சாப்பாடு என்னோடு என்று சொல்லிட்டு' போக்கொண்டே இருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது இருந்தும் யோசித்தேன். இந்த குருக்களின் இரகசியம் என்ன? எப்படி இந்த இருபத்தைந்து ஆண்டுகளை கடந்து வந்தனர்? இவர்களை இயக்கும் சக்தி என்ன? நன்றியுரையிலே பலர் இவர்களின் அருமை பெருமைகளை புகழந்தவன்னம் இருந்தனர், இருப்பினும் இவர்களின் எவரும் மதிமயங்கியவர்கள் போல தென்படவில்லை. அவர்களும் ஏதோ மற்றவரின் விழாவிற்கு வந்தவர்க்ள போலவே தோன்றினார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய நாளாந்த அலுவல்களை கவனிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.
இந்த வேளையில் இவர்களை மௌமான அவதானித்தேன். நண்பர்களோடு கதைத்து சிரித்தாலும் மனதினுள் இவர்களின் குருத்துவத்தின் அழகை இரசித்தேன். இவர்கள் கடந்த காலத்தின் கோர யுத்தத்திலும், அவலங்கள் நிறைந்த இடப்பெயர்வுகளிலும் மக்களுக்காக உழைத்தவர்கள். மக்களோடு தங்களை அடையாளப்படுத்தியவர்கள். இவர்களுக்கு அடையாளம் கொடுத்தது இவர்களின் ஆளுமைகள் அல்ல, எனெனில் இவர்களைவிட ஆளுமையில் சிறந்தவர்கள் இவர்களின் நண்பர்களாக உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் கல்வித் தகமைகள் அல்ல, இவர்களைவிட இவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிறந்த கல்விமான்களாக இருக்க்கின்றனர். அப்படியானால் இவர்களின் தகுதி என்ன? அப்படியென்ன இவர்கள் சாதித்தனர்?
இன்று பிரசங்கி சொன்னது நினைவிற்கு வருகிறது. இவர்கள் ஆண்டவரோடு இருந்தார்கள், பலத்திலும் பலவீனத்திலும் இயேசுவை பற்றினார்கள். மெது மெதுவாக அறிந்தும் அறியாமலும் மறு இயேசுக்களாக மாறிவிட்டார்கள். இதனால் அவரோடு இருந்து பின் அவரின் பிரசன்னத்தை அனுபவித்து வழங்குகிறார்கள்.
தொடரட்டும் உங்கள் பயணம், உங்கள் உறவு.
ஆண்டவர் உங்கள் ஆசீர்வதிக்கிறார்.
நீங்களும் ஆசீர்வதித்து, ஆசீர்வாதங்களாக மாறுங்கள்.
மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக