வெள்ளி, 28 ஜூலை, 2017

களைகள்: Weeds

 களைகள்
சனி, 29 ஜூலை, 2017

களைகள் என்றால் என்ன? இது சிறிய வயதில் விஞ்ஞான பாடத்திற்காக கேட்கப்பட்ட கேள்வி. களைகளைப் பற்றி பல வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. 'விவசாயி ஒருவரால் தன் நிலத்தில், தன்னால் விதைக்கப்படாதது, விதைக்கப்பட்டால் அது களை எனப்படும்', என்பது எங்களுக்கு சொல்லித்தரப்பட்டது. தக்காளி விதைக்கப்பட்ட நாற்றுமேடையில் மிளகாய்ச் செடி வளர்ந்தால் அதுவும் களையே
இன்று தூய மார்த்தாவுடைய திருநாள். ஆண்டவர் இயேசு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் காட்டாமல், பெண் சுதந்திரத்தை, ஒரு ஆணாக இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து அழகுபார்த்தவர். இன்று இரண்டு ஆயிரங்கள் ஆண்டுகள் கடந்தும், வேலையில்லாத சில ஆணாதிக்க வெட்டிகள், பெண்கள் செய்வது சரியா பிழையா என்பதை பார்ப்பதே வேலையாகக் கொண்டு திரிகிறார்கள். மார்த்தா, மரியா மற்றும் லாசருடைய சகோதரி. இவர்கள் பெத்தானியாவை சேர்ந்தவர்கள். இயேசு ஆண்டவரின் பல தேவகளை சகோதரியின் நிலையிலிருந்து கவனித்தவர் மார்த்தா. ஓடி ஓடி வேலைசெய்து சிலவேளைகளில் ஆண்டவரிடம் அன்புப் பேச்சுக்களையும் வாங்கியவர். இயேசு இந்த சகோதரியை மிகவும் நேசித்தார், இதனால்தான் தன்னருகில் இருந்து தான் பேசுவதை கேட்கச் சொன்னார். தன் சகோதரன் லாசர் இறந்தபோது, இவர் அழுத அழுகையைப் பார்த்து ஆண்டவரையே கண்கலங்க வைத்தவர். 'நீர்தான் வரவிருக்கும் மெசியா என்பதை நான் நம்புகிறேன்' (யோவான் 11,25-27) அன்று மார்த்தா சொன்னது இன்று நம்முடைய விசுவாசமாகியிருக்கிறது. வாழ்க மார்த்தா, வாழ்க பெண்ணியம்
மார்த்தாவிற்கும் பயிருக்கும், களைகளுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்க விளைகிறேன். இந்த உலகம், பயிர்களைவிட களைகள் மேல் மோகம் கொள்ளத் தொடங்கிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. கடவுள் விதைக்கிறதைவிட தீயவர்கள் விதைக்கிறது நன்றாக வளர்வன போல தோன்றுகின்றன. ஒழுக்கமாக உடுத்துகிறவர்கள், உற்சாகமாக படிக்கிறவர்கள், நீதியாக வாணிகம் செய்கிறர்கள், நேர்மையாக நிறுவணங்கள் நடத்துகிறவர்கள், விசுவாசமாக உறவு செய்கிறவர்கள், உண்மையாக காதலிக்கிறவர்கள், அமைதியாக தியாகம் செய்கிறவர்கள், நீதிமான்களின் வாழ்க்கை நடத்துகிறவர்கள், முட்டாள்களாகவும், விவேகமற்றவர்களாகவும், அறிவிலிகளாகவும், கோமாளிகளாகவும் பார்கப்படுகிறார்கள் போல, சில சமயத்தில் தோன்றுகிறது
புத்திசாலித்தனமாக ஏமாற்றுகிறவர்கள், கவர்ச்சியாக உடுத்தி அசுத்தமாக வாழ்கிறவர்கள், பொய் சொல்லி மதம் செய்கிறவர்கள், ஆண்டவரை தெரியாத குணப்படுத்துகிறவர்கள், தந்திரமாக ஏமாற்றி வாணிகம் செய்கிறவர்கள், அருள் இல்லாமல் உளவியல் செய்கிறவர்கள், பேச்சிலும் நடையிலும் வன்முறை செய்கிறவர்கள், கதாநாயகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் போலவும் தெரிகிறது. நம் பிள்ளைகளுக்கு இவர்கள் அடையாளமாக மாறிவிடுவார்களோ என்ற அச்சமும் வருகிறது
மார்த்தா களையல்ல, அவர் பயிர், அந்த பயிர் முப்பது, அறுபது, நூறு மடங்காக பயன்கொடுத்தது. அதனால்தான் இன்று அவருடைய திருவிழா. களைகள் கவர்ச்சியாக இருக்கலாம், இன்பம் தரலாம், உசுப்பேத்தலாம், வெறியூட்டலாம், ஆனால் அவைகள் களைகள்தான் என்பதை மறவாமல் இருப்போம். அவை தீயவரால் விதைக்கப்பட்டவை என்பதையும் அறிந்திருப்போம். களைகள் விதைக்கப்படாதவை, விரும்பப்படாதவை, ஆபத்தானவையும் கூட. பொறுத்திருந்து அறுவடை நாளில் உகந்த முறையில் வெளியேற்றிவிடுவோம். பயிர் வளர்ப்போம், பயிராகுவோம்
நலம் உண்டாகட்டும்!!! 

மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...