நெருக்கப்படும் விதைகள்
பாலஸ்தீன மக்களுக்கு விதைகள் என்ற உவமை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
இதனால்தான் இயேசு இந்த உவமையைச் சொல்லியிருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சந்தித்த பல கலாபனைகளைக் கருத்திற்கொண்டுதான் மத்தேயு இந்த உவமையை அழகாக்கி தன் நற்செய்தியில் வைக்கிறார் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், இதற்கு பல வாய்ப்புக்கள் உள்ளன.
விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், இயற்கையையே சவால்ப்படுத்தினாலும் ஒரு சாதாரண விதையை இயற்கையின் தகுதியோடு விஞ்ஞானத்தால் உருவாக்க முடியுமா? விஞ்ஞானம் உருவாக்கும் விதைகள் பலவிதமான பலவீனங்களைக் கொண்டிருக்கின்றன. இன்று சந்தையில் கிடைக்கும் செயற்கையான விதைகளுக்கும், மரக்கறிகளுக்கும், உயிரினங்களுக்கும், இயற்கையான உருவாகின்ற மற்றவைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. முதலாவது வித்தியாசம், செயற்கையானவை உருவாக்கப்படுகின்றன. இயற்கையானவை உருவாகின்றன.
விதை ஒரு அதிசியம். சில விதைகள் கண்ணுக்குதெரியாதவை. சில விதைகள் பல கிலே நிறைகள் உடையவை. விதைகள் உயிரை உள்ளே உறங்கு நிலையில் கொண்டிருக்கின்றன. விதைகள் போராட்ட குணமுடையவை. விதைகள்தான் எதிர்காலத்தை சந்திக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன. விதைகள் தங்களை அழித்து தன் சந்ததிக்கு உயிர் கொடுக்கின்றன. விதைகள் தாவரத்தை மட்டுமல்ல அதற்கு தேவையான சத்துக்களையும் உள்ளே வைத்திருக்கின்றன. இதன் காரணமாகத்தான் இயேசு பலவேளைகளில் விதைகளை உதாரணத்திற்கு எடுக்கிறார் என நினைக்கிறேன். அவர் கடவுள் அல்லவா, இதனால் தன் படைத்தவற்றில் விதையை அவர் நேசிக்கிறார் போல. போராட்ட காலத்தில் போராளிகள் தங்கள் சாகாக்களை விதைகளுக்கு ஒப்பிட்டனர். அவர்களின் துயிலும் இல்லங்களை விதைநிலங்கள் என்று உணர்வு பூர்வமாக அறிவித்தனர். அரச படைகளும் இந்த துயிலும் இல்லங்களை உடைப்பதில் ஆர்வம் காட்டினர், ஏனெனில் இந்த விதைகள் ஆபத்தானவை என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆக இருசாரர்க்கும் விதைகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது.
மத்தேயு கிறிஸ்தவர்களை விதைகள் என்கிறார். சில வேளைகளில் பாதைகளின் விசாலமும், பாறைகளில் வெப்பமும், முட்செடிகளின் அதீத வளர்ச்சியும் இந்த விதைகளை அழிக்கின்றன. கிறிஸ்தவர்களுக்கு பாதை இலக்கல்ல, இலக்குத்தான் இலக்கு. பாறை போன்ற வலிமையான இடங்கள்கூட வேருக்கு ஆபத்தாகலாம். அழகாக நம் கூடவளர்பவை ஆபத்தான களைகளாகலாம்.
கவனம், நாம் விதைகள், நல்ல நிலத்தில் விழவேண்டும்.
எவ்வளவு பயன்தரவேண்டும் என்பதை ஆண்டவர்தான் தீர்மாணிப்பார்.
நலம் உண்டாகட்டும்.
மி. ஜெகன்குமார் அமதி
அமதியகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக