நிர்வாணம்
அறியமுடியாதவாறு மறைந்திருப்பது ஒன்றுமில்லை என்று இயேசு இன்றைய வாசகத்தில் சொல்கிறார் (மத்தேயு 10,24-33). இன்றைய டியிட்டல் (இலத்திரனியல்) உலகில் இந்த வசனம் நல்ல அர்த்தம் கொடுக்கிறது. பேஸ்புக் (முக நூல்) என்ற மிக பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளம் இன்று இரண்டு மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது என்று அதன் நிறுவுனர் மார்க் சுக்கர்பேக் சில நாட்களுக்கு முன்னர் மார்தட்டினார். இதை இன்னொரு விதத்தில் சொன்னால் இரண்டு மில்லியன் மக்கள் தங்கள் பிரைவசியை (தனித்துவத்தை) இழந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த உலக்த்தில் இன்று என்னுடைய அல்லது உங்களுடைய பிரைவசி என்று ஒன்றுமில்லை. எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும், எல்லாருடைய தரவுகளையும் எல்லாருக்கும் தெரியும். இன்டர்நெட்டில் (வலைத்தளம்) ஒருவர் தன்னை இணைக்கிறபோது, போது அவர் அனைவருடைய சொத்தாகிறார். ஆக இனி என்ன, அனைவரும் நம் ரகசியங்களை கூரையிலிருந்து அறிவிப்பார்கள். நம் தாய் நாடு இலங்கை, பேஸ்புக் மோகத்தால் சிக்கித் தவிக்கும் நாடுகளில் முக்கியமான ஒன்று என்ற சாதனையை பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டது.
குழப்படி செய்கிற பிள்ளைகள் பொம்மைகள், இனிப்பு, கேட்டு அழுத காலம் போய் கைபேசியை வைத்து சிரித்துக்கொண்டிருக்கிற காலம் இது. மைதானத்தில் கிரிக்கெட், கால்பந்து, கரப்பந்து விளையாடிய காலம் போய், நோட்புக்கில் (சிறிய வகை மடிக் கணினியில்) அவ்விளையாட்டுக்களை தனியே, பிரசித்தி பெற்ற ஆனால், இல்லாத உருவங்களுடன் விளையாடும் காலம் இது. காதலியும் காதலனும் அருகில் அமர்ந்திருந்தும், இருவரும் இரு கைபபேசிகளுடன் வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இது தொடர்பில் இருக்கும் உலகம் அல்லவா! தொலைபேசியும், இணையமும், உதவியா, அல்லது உபத்திரவமா என்று சொல்லத் தெரியவில்லையே? யாரை யார் காப்பாத்திறது என்றும் தெரியவில்லை. ஆலயத்திற்கு உள்ளும், படிக்கட்டிலும், வெளியிலும் தொலைபேசியும், இணையமும், செபம் செய்கின்றன.
இயேசுவிற்கும் இன்று வைபை தேவைப்படுகிறது போல். இயேசு இன்று 'காதோடு காதாய் கேட்பதை பேஸ்புக் மற்றும் இணையத்தில் சொல்வார்கள்' என்று சொல்கிறாரோ! என எண்ணத் தோன்றுகிறது.
இதனைப் பற்றி என் நண்பர்களுடன் பல்கலைக்கழக்கத்தில் விவாதித்தபோது, சிலர் சார்பாகவும், சிலர் எதிராகவும் வாதாடினார்கள். இரகசியம் என்று ஒன்று தேவையில்லை என்றார்கள் சிலர். இரகசியம் இல்லாவிட்டால் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் இல்லாமல் போகும் என்றார்கள் சிலர். தனித்துவம் தேவையில்லை, தனித்துவ அடையாளங்களும் தேவையில்லை, 'அனைவரும், அனைவருக்கும், அனைத்தும்' என்ற தோரணையில் வாழப் பழகவேண்டும் என்றார்கள் இன்னும் சிலர். இந்த மூன்று கருத்துக்களையும் ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது.
சீடர் குருவைப்போல் ஆகலாம், குருவும் சீடரைப்போல் ஆகலாம். ஆனால் குரு குருதானே! சீடர் சீடர்தானே! இந்த நிலை மாறாது என நினைக்கிறேன். அம்மா அப்பாவின் வேலையைச் செய்யலாம், அப்பாபோல மாறாலாம், ஆனால் அப்பாவாக மாறமுடியுமா? மாறலாம் என விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால் இயற்கையும், கடவுளும், கலாச்சாரமும் அப்பாவைத்தானே அப்பா என்கிறன என நினைக்கிறேன்!
ஆண்டவர் அஞ்சாதிருங்கள் என்று சீடர்களுக்கு சொன்னது மட்டும் மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்கிறது.
மி. ஜெகன்குமார் அமதி
அமதியகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக