வெள்ளி, 14 ஜூலை, 2017
பொல்லாத பாம்பு:
ஒருநாள் சக குருக்களுடன் உணவருந்திக்கொண்டிருக்கும் போது எங்களுடைய சமையல் அக்காவுடைய சத்தம் பெலமாகக் கேட்டது, 'பாதர் பாம்பு, பாம்பு'. அப்போது ஒரு சுவாமி சொன்னர் 'அது தானாக போய்விடம் விடுங்கோ'. எங்கள் சமையல் அக்கா சொன்னர், 'பாருங்கோ பாதர் அது தேடி வரும், பொல்லாதது' பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ் பழமொழி. ஏன் பாம்புக்கு அவ்வளவு வல்லமையாக என பல வேளைகளில் சிந்திக்க தூண்டுகிறது.
இது இப்படியிருக்க, இன்றைய வாசகம் பாம்பின் அடையாளத்தை நமக்கு உதாரணப்படுத்துகிறது (காண்க மத்தேயு 10,16-23). ஆண்டவர் இயேசு பாம்பைப் போல விவேகமுள்ளவர்களாவும், புறாவைப்போல கபடு அற்றவர்களாகவும் இருக்கக் கேட்கிறார்.
தமிழ் உலகில் சில பகுதிகளில் பாம்பு பொல்லாத விலங்காக வர்ணிக்கப்படுகிறது. அதற்கு காரணம், பாம்பின் ஆபத்தான விசத்தையும், அதன் மறைந்திருந்து தாக்குகின்ற வல்லமையையும் கொள்ளலாம். உலகிலே ஆபத்தான விலங்குகளில் பாம்பும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. விவிலிய உலகில் பாம்பு மிகவும் சபிக்கப்பட்ட விலங்காக கருதப்படுகிறது. உண்மையில் பாம்பு பாவம். கானானியரின் பாம்பு வழிபாட்டிலிருந்து இஸ்ராயேல் மக்களின் விசுவாசத்தைக் காக்க விவிலிய ஆசிரியர்கள் பாம்பை சாத்தானின் உருவகமாக காட்டுகின்றனர். ஆதாம் ஏவாள் கதையிலும் பாம்புதான் முக்கியமான வில்லன். உண்மையில் கடவுளுக்கு பாம்பின் மீது எந்த விதமான கோபமும் பாரபட்சமும் இருக்கவேண்டிய தேவைகிடையாது. ஏனெனில் பாம்பையும் அவர்தான் படைத்தார். ஆரம்ப கால மனிதர்கள் பாம்பைப் பற்றி பல விதமான கட்டுக் கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். பாம்பு அரக்க படைப்பாகவும், தீய சக்தியாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அதனுடைய விசமும் மற்றும் தோற்றமும் காரணமாக இருக்கலாம். முதல் தடவையாக இயேசு பாம்பிற்கு நல்ல பெயர் கொடுக்கிறார். பாம்பைப் போல விவேகமுள்ளவர்களாக இருக்க ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் கேட்கப்படுகிறார்கள். உண்மையில் சொல்லப் போனால் பாம்பு மிக பாதிக்கப்பட்க்கூடிய விலங்கு. பாம்பிற்கு எதிரிகள் பலர், அதில் மனிதர்கள் மிக முக்கியமானவர்கள். இதனால் அது விவேகமாக இருக்கவேண்டிய தேவையில்
இருக்கிறது, இந்த விவேகத் திறனைக்கொடுத்தவரும் கடவுள்தான். பாம்பை இயேசு அசுத்தமான விலங்காக கருதியிருந்தால் தன்னுடைய அன்புச் சீடர்களை பாம்பைப் போல இருக்கச் சொல்லி கேட்டிருக்க மாட்டார். அத்தோடு சாதுவான பறவையாகிய புறாவுடன் பாம்பை சேர்த்திருக்க மாட்டார். ஆக இயேசுவிற்கு பாம்பு என்கின்ற விலங்கோடு எந்தப் பகையும் இல்லை. அதன் இயற்கையான சுபாவங்களோடும் அவருக்கு பயமில்லை.
பாம்புக் குணங்களைப் பற்றி சற்று அவதானமாக இருக்க வேண்டும். பாம்பின் குணம் பாம்பிற்குத்தான் பொருந்தும். வாயில் விசம், மறைந்திருந்து தாக்குதல், நழுவிப் போகுதல் போன்றவற்றை பாம்பு தன் இருப்பிற்காக, தக்கிப்பிழைக்க பயன்படுத்துகிறது. ஆனால் பாம்பைப் பற்றி விளக்கம் சொல்லும் மனிதர்கள் பாம்பைவிட விசமுள்ளவர்களாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. பாம்பே பார்த்து பயந்து போகும் அளவிற்கு இன்று மனிதர்கள் ஆபத்தானவர்களாக மாறியிருக்கிறார்கள். பாம்பிற்கு இரட்டை நாக்கு அதனால் அதனில் உண்மையில்லை என்பார்கள். ஆனால் பாம்பிற்கு மனித மொழியில் பேசத் தெரியாதே! பின்னர் எப்படி உண்மை பொய்யை கூற முடியும்? ஆனால் ஒற்றை நாக்கு உள்ள மனிதர்கள்தானே பொய்யைக்கூட உண்மையாக பேச கற்றுக்கொண்டார்கள்!!! இது எப்படி.
பாம்பின் இயற்கையான பலங்களை தெரிந்து கொள்வோம்.
அது ஒரு உயிரினம் என்பதையும் மறவாமலிருப்போம்.
பாம்பை பாம்பாக இருக்க விடுவோம்.
பாவம் பாம்பு.
மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக