திங்கள், 17 ஜூலை, 2017

வெளிநாட்டுக்காரர்: Foreigner

செவ்வாய், 18 ஜூலை, 2017

வெளிநாட்டுக்காரர்

தமிழில் வெளிநாட்டவர், புறவினத்தவர், அந்நியர் போன்ற சொற்கள் சகோதரத்துவ சொற்கள் அல்ல.  இவை மற்றவருடைய மனதை இலகுவில் புண்படுத்தக்கூடியவை இதனால் தான் நாம் இந்த சொற்களை அதிகமாக பாவிப்பது கிடையாது. பாவிக்கவும் கூடாது. ஆனால் சில மொழிகளில் காலச்சாரங்களில் இந்த சொல் சாதாரண சொல்லாக பாவிக்கப்படுகிறது. இந்த சொல் மற்றவர்களை புண்படுத்துகிறது என்று தெரிந்தும் அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. முக்கியமாக இத்தாலி நாட்டு மக்கள் மிக நல்லவர்கள், அங்குள்ள சிலர் இந்த சொற்களை அதிகமாக இத்தாலி அல்லது ஐரோப்பிய மக்கள் அல்லாதவர்களுக்கு அடிக்கடி பாவிப்பார்கள். சில வேளைகளில் கருப்பர், ஆசிரியர், தெரியாதவர் என்ற சொற்களைக்கூட பாவிப்பர். இந்த வசைமொழிகளிலிருந்து குருக்களும் தப்பமுடியாது. ஒருமுறை என்னுடைய நண்பர் ஒருவரை, அவர்களின் சுவாமி அறையில் சமைக்கும் பெண், கருப்பு சம்மனசு சுவாமி 
 (‘சச்சர்தோதே ஆஞ்சல்லோ நேரோ’ sacerdote angello nero) என்று சொன்னர், என் நண்பருக்கு சிரிப்பு வந்தது எனக்கு கோபம் வந்தது. கருப்பாக இருந்தாலும் அவர் சம்மனசுதான், வெள்ளையாக இருந்தாலும் சாத்தான் சாத்தான்தான் என நினைத்துக் கொண்டேன்
யார் இந்த உலகில் புறவினத்தவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள்? என்னுடைய கருத்துப்படி அனைவரும் புறவினத்தவர்களே. இந்த உலகம், இந்த மண் கடவுளுக்குரியது. இங்கே வாழுகின்ற அனைவரும் புறவினத்தவர்களே. மூன்றாம் தலைமுறைக்கு பிறகு என்னை என் உறவினர்களின் சந்ததிக்கே தெரியாமல் போகும், குரு என்ற படியில் இது நிச்சயமாகவும் விரைவாகவும் நடக்கும்அவர்களுக்கும் நான் புறவினத்தவனே. இரண்டாவது தலைமுறையாயினும் வெளிநாடுகளில் இருகும் என்னுடைய சொந்த, ஒன்று விட்ட சகோதரர்களுக்கும் அவர் குடும்பங்களுக்கும் நான் புறவினத்தவன்தான். மற்றவரை புறவினத்தவர் என்று நான் சொல்லும் போது, உடனடியாக அவருக்கும் அவர் உலகத்திற்கும் நான் புறவினத்தவனாகிறேன்
ஒருவரை புறவினத்தவர் என்று சொல்லும்போது அது, அந்த நபரின் உள்ளார்ந்த கர்வ மனநிலையையும், தவறான புரிதலையும் காட்டுகிறது. அவர் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்தாதவர் என்பதையும் காட்டுகிறது. ஐரோப்பிய நாடுகளில், ஆசியர்கள், ஆபிரிக்கர், தென் அமேரிக்கர், அதிகமாக இந்த வசைமொழிக்கு உள்ளாகிறார்கள். ஆனால் இவர்களும் தங்கள் சொந்த நாடுகளிலே, சொந்த பிரேதசங்களிலே, தம் சொந்த மக்களையே பிரிவினைப்படுத்தி புறவினத்தவர்கள் என்கிறார்கள். மற்றவர்கள் செய்தால் இவர்களுக்கு நோவு, இவர்களே செய்தால் தேசியவாதம். இவர்களை என்ன செய்வோம்? நம் வைகைப் புயல் சொல்லுவது போல, ஏன்டா, உனக்கு வந்த இரத்தம், எனக்கு வந்த தக்காளிச் சட்னியா?
இன்றைய நற்செய்தியில் இயேசு சில யூதேய நாட்டு நகர்களுக்கு வடை (ஏச்சு) கொடுக்கிறார். இவைகள் திருந்தாதவர்கள் என்று கோபப்படுகிறார். இந்த நகர்கள்: கெராசின், பெத்சாயிதா, மற்றும் கப்பர்நாகூமை போன்றவை இயேசுவோடு மிகவும் நெருக்கமானவை. அதிகமாக அவர் போதனைகளை கேட்டவை, அவருடைய பாதச் சுவடுகளை சுமந்தவை. இருந்தும் இயேசுவை தக்கவைக்க தவறின. ஆனால் புறவின நகர்களான தீர், சீதோன், மற்றும் சோதோம் போன்றவை இயேசுவின் பார்வையில் இரக்கம் பெறுகின்றன (வாசிக்க மத்தேயு 11,20-24). ஆக பிறப்பால் மனிதராகவும், குடிமகனாகவும், தமிழராகவும், கிறிஸ்தவனாகவும் இருந்தால் போதாது, அதனை வாழ்வில் காட்டவேண்டும் என நினைக்கிறேன். அந்த புறவினத்தவர் என்றும் யாரும் கிடையாது, ஏனெனில் அனைவரும் கடவுள் முன்னாலும், எதிர்காலத்தில் முன்னாலும் புறவினத்தவர்களே
நல்ல புறவினத்தவர்களாக இருப்போம்
நலம் உண்டாகட்டும்!

மி. ஜெகன்குமார் அமதி
அமதியகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...