செல்ல மகள்!
வியாழன், 6 ஜூலை, 2017
'பெண்ணை கண்ணனெனப் போற்று' என்பது தமிழரின் வீரமிக்க பெண்சார்பு கலாச்சாரம். பெண்ணை தெய்வமாகவும், நிலமாகவும், நாடாகவும் கண்டு, போற்றிப் பெறுமை பாராட்டியவர்கள் தமிழர்கள். நளவெண்பா, மணிமேகலை, குடும்ப குத்துவிளக்கு என்று நூற்றுக்கணக்கான
இலக்கியங்கள் பெண்ணின் பெருமையையும், அவர்கள் மேல் உள்ள தமிழின் காதலையும் இன்றும் அழகாக உலகிற்கு சொல்கின்றன. இதனால்தான், நாட்டை தாய் நாடு எனவும், மொழியை தாய் மொழி எனவும், திருச்சபையை தாய்த் திருச்சபை எனவும் அழைக்கின்றோம். பெண்ணை ஆணுக்கு நிகராக பார்த்த தமிழ்க் கலாச்சாரம் வட இந்திய, மற்றும் ஆசிய-ஐரோப்பிய காலாச்சாரங்களின் தாங்கங்களால், பெண்ணை சமையலறைக்குள்ளும் பள்ளியறைக்குள்ளும் பூட்டிவைக்க முயற்ச்சி செய்கிறது. பெண்ணுக்காக வீர விளையாட்டுகள் நடத்தி, போர் செய்த காலங்கள் மாறி, பெண்களை வைத்து விளையாட்டு நடத்தி, வியாபாரம் நடத்தும் விபச்சார கலாச்சாரத்திற்குள் தெரியமால் நுழைந்திருக்கிறோம்.
ஆண்களுக்கு பெண்கள் சட்டம் இயற்றக்கூடாது என்றால், எப்படி ஆண்கள் பெண்களுக்கு சட்டம் இயற்றலாம்? பெண்களின் ஆடை அமைப்பை ஆண்கள் எப்படி நிர்ணயிக்கலாம்? கடவுள் பெண்களை ஆண்களுக்கு இரண்டாம் தரமாக படைத்தார் என்றால், அவர் என்ன ஆண் கடவுளா?ஆவர் ஆண் கடவுள் என்றால் அவர் மனிதர்தானே, ஆக அவர் எப்படி கடவுள் ஆக இருக்க முடியும்? கடவுள் தன்னை தாய் என்று வெளிப்படுத்துவதை ஏனோ ஆணாதிக்கம் ஏற்க மறுக்கிறது?
இப்படியான கேள்விகளை நான் என் சக நண்பர்களோடு பல வேளைகளில் கேட்பதுண்டு.
ஈழத்தின் அன்பு மகள் வித்தியாவிற்கு, இந்த ஆண் சமுகம் செய்ததை நினைக்கின்றபோது வேதனையாக மட்டுமல்ல குற்ற உணர்வாகவும் இருக்கிறது. இங்கே தவறிழைத்தவர்கள் அந்த ஊதாரி ஆண்கள் மட்டுமல்ல, அனைத்து ஆண்வர்க்கமும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. எப்போதெல்லாம் ஒரு பெண் மகள் துன்புறுத்தப்படுகிறாளோ, அங்கே அனைத்து அப்பாக்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், தாத்தாக்கள், அண்ணன்கள், காதலன்கள் என்று எல்லோறும் தோல்வியடைகிறார்கள். நானும் அதில் அடங்குகின்றேன்.
இன்று திருச்சபையின் அன்பு மகள் மரிய கொறற்றியின் திருநாள். அவளுக்கு ஆணாதிக்கம் கொடுத்த அநீதிக்கு, கடவுள் கொடுத்த நீதி, அவள் இன்று புனிதை, தூயவள்!!! அனைத்து ஆண்களுக்காவும் அவள் பரிந்துபேசுகிறாள். என்னவொரு அழகு. வித்தியாவும் புனிதைதான், தூயவாள்தான், இந்த அசிங்கப்பட்ட ஆணாதிக்க பேய்க்கு அவள் மருத்து கொடுக்கவேண்டும். இந்த ஊதாரித் தம்பிகளுக்காக பரிந்துபேச வேண்டும், மரிய கொறற்றியைப் போல!!
நெத்தூனோ என்ற இத்தாலிய நகரின் மனட்சாட்சியை புரட்டிப்போட்டாள் இந்த வீரமகள், அதனைப் போல இந்த ஈழ மகள் நம் மனசாட்சியை புரட்டிப்போட அன்னையாம் இறைவனை வேண்டுகிறேன். சந்து, பொந்து, வீடு, வீதிகளிலிருந்து பெண்ணை உடலாக மட்டும் பார்க்கும் நோயாளிகளுக்கு ஆண்டவர் மருந்து தருவாராக!
அன்பு மகள் வித்தியாவிற்கு நீதிகிடைக்கட்டும்,
நமக்கென்ன என்று இருக்கும் நம்மவர்க்கு மரிய கொறற்றி புத்தி சொல்லட்டும்.
ஜெகன்குமார் அமதி
அமைதியகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக