புதன், 5 ஜூலை, 2017

பன்றிக் கூட்டங்கள்

புதன், 5 ஜூலை, 2017
பன்றிக் கூட்டங்கள்

பன்றிகள் சபிக்கப்பட்ட விலங்குகளா? ஏன் இவை சபிக்கப்பட்ட விலங்குகள்? யார் பன்றிகளை சபித்தார்கள்? என்ற கேள்விகள் பல காலமாக என்னுள்ளே எழுகின்றன. இஸ்லாமிய சகோதரர்களும், இஸ்ரேலிய சகோதரர்களும் பன்றியை விலக்கப்பட்ட விலங்கினமாக பார்க்கிறார்கள். விவிலியத்தின் கருத்துப்படி பன்றி இரட்டைக் குளம்புடைய விலங்காக இருந்தாலும், அது அசைபோடாத விலங்கு என்பதன் காரணத்தினால், அது மனிதருடைய சாப்பாட்டு அட்டவணையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை தீட்டாக முதல் ஏற்பாடு கருதுகின்றது (காண்க லேவியர் 11,7). விவிலிய பாரம்பரியத்தையம் தாண்டி, பன்றிகள் அனைத்தையும் உண்ணும் அனைத்துமுண்ணியாக இருப்பதாலும், சேறு மற்றும் ஊத்தைகளை திண்ணபதாலும், அவை அசுத்தமானவை அல்லது சுகாரத்திற்கு ஒப்பானவை அல்ல என்ற நம்பிக்கை முற்காலத்திலேயே இருந்திருக்கிறது. பாலைவன வாழ்க்கையில் தொற்றுநோய் மிக ஆபத்தாக இருந்த படியாலும், பன்றிகளால் இலகுவாக தொற்று நோய்கள் ஏற்பட்டதாலும், இந்த மிருகம் படிப்படியாக அசுத்தமான மிருகமாக மாறி பின்னர் அதற்கு விவிலிய சட்டங்களும் கொடுக்கப்பட்டன என நினைக்கின்றேன். இன்றைய வாசகத்தில் இயேசு கெதரேனர் பகுதியில் வாழ்ந்த அடங்காத பேய்களை பன்றிக்கூட்டத்தினுள் அனுப்பி அவற்றை கடலில் மூழ்க விடுகிறார். ஆக பன்றியும், தீய ஆவிகளும், கடலும் அசுத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மத்தேயுவின் இந்த நற்செய்திப் பகுதியில் பன்றிகளைப் பற்றிய யூதர்களின் வெறுப்பு அப்படியே தெரிகிறது
இது இப்படியிருக்க ஏன் கெதரேனர் பகுதியில் மக்கள் பன்றிக் கூட்டத்தை வளர்த்தார்கள்? ஏன் இந்த பன்றிக்கூட்டம் கடலினுள் விழுந்தபோது அவர்கள் பயமும் கோபமும் கொண்டார்கள்? ஏன் அவர்கள் இயேசுவை தங்கள் பகுதியினுள் இருந்து வெளியேறக்கேட்டார்கள்? (மத் 8,28-34). பேய்களுக்கு தெரிந்திருந்தது இவர் இறைமகனென்று மக்களுக்கு தெரியவில்லையே!!!, அதாவது அந்த கெதரேனர் பகுதி மக்களுக்கு தெரியவில்லை என்கிறார் மத்தேயு
பன்றி இறைச்சி சாப்பிடுகிறவர்களுக்கு தெரியும், அதன் சுவை எப்படியென்று. அனைத்து தமிழர்களும் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை என்றாலும், அதிக எண்ணிக்கையானவர்கள் 
இந்த இறைச்சியை சாப்பிடுகிறார்கள். உலகிலே சில இடங்களில் நாய், பூனை, பாம்பு போன்ற விலங்குகளும் இறைச்சிக்காக அடிக்கப்படுகின்றன. சிலருக்கு இவை சுவையான உணவு, சிலருக்கு அருவருப்பு. சிலருக்கு இவை மிருக வதைகள். யார், சுவையையும் அருவருப்பையும் தெரிவுசெய்வது? இதற்கு விடைகாண்பது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் குறிப்பிட்டவர்களுடைய அருவருப்பையும், சுவையையும் அனைவருக்கும் ஏற்புடையதாக்குவது ஒருகாலத்திலும் நீதியாகாது என நினைக்கிறேன். மாட்டிறைச்சி சாப்பிடாதே! அல்லது சாப்பிடு! என்று யார் சொல்லவது, மாடு மட்டும் சொல்லாம் என நினைக்கிறேன். பன்றி இறைச்சி சாப்பிடாத சிலர் பன்றியைப் போல அசுத்தத்தோடு சௌகரிகமாக வாழ பழகியிருக்கிறார்கள். பன்றி என திட்டுபவர்கள் அதிகமான வேளைகளில் பன்றியைவிட உள்ளத்தாலும் உடலாலும் சாக்கடையாக இருக்கிறார்கள். இதனால் பன்றியை இழுத்து, அசுத்தத்தை பற்றி பேச பன்றியை தவிர யாருக்கும் உரிமை இல்லை என நினைக்கிறேன்
சரி பன்றி அசுத்தமானது என்ற நம்முடைய வியாக்கியானம் பன்றிக்கு தெரியுமா?


ஜெகன்குமார் அமதி
அமைதியகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...