தலைச்சான் பிள்ளை!
எசாவுடைய தலைச்சான் உரிமையை, யாக்கோபு தன்னுடையதாக்கிக் கொள்கிறான். ஆசீர்வாதம் என்பது பழைய ஏற்பாட்டில் பலவிதமாக நோக்கப்படுகிறது. கடவுள் மனிதர்களை ஆசீர்வதிக்கிறார், மனிதர்கள் கடவுளை ஆசிக்கிக்கிறார்கள். மனிதர்கள் மனிதர்களையும் ஆசிர்வதிக்கிறார்கள். இந்த வகையில் தலைச்சான் ஆசீர் அல்லது மூத்த மகனுக்கான ஆசீர் மிக முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய முதல் வாசகம், யாக்கோபு தன்னுடைய மூத்த சகோதரனின் தலைச்சான் ஆசீர்வாதத்தை, தன் தாயோடு சேர்ந்து வஞ்சித்ததை காட்டுகிறது (தொடாக்க நூல் 27,1-29). இந்த தலைச்சான் உரிமை ஒரு எபிரேய மகனுக்கு வீட்டிலே பல உரிமைகளைக் கொடுத்தது. ஆண் சமூகமாக இருந்த எபிரேய சமூகத்தில், தலைச்சான் பிள்ளையாக பிறப்பதே ஆசீராகக் கருதப்பட்டது. கிட்டத்தட்ட மூத்த மகன் முடிக்குரிய இளவரசனாகவே பிறக்கிறான். ஆனால் பல வேளைகளில் இரண்டாவது பிறந்தவர்கள் அல்லது இளையவர்களே ஆட்சியுரிமையை தக்க வைக்கிறார்கள் அல்லது தேர்ந்து கொள்ளப்படுகிறார்கள், இது வித்தியாசமாக இருக்கிறது. கடவுள் மனிதரின் சாதாரண தெரிவை ஏற்றுக்கொள்கிறார் இல்லையா? அல்லது கடவுள் பலவீனமானவர்களைத்தான் தெரிவு செய்கிறாரா? இதற்கு சாதகமாக பல பதில்கள் உள்ளன, எதிராகவும் ஒரு சில பதில்கள் உள்ளன.
ரெபேக்கா ஒரு தாயாக எப்படி ஒரு பிள்ளையின் உரிமையை மற்ற பிள்ளைக்கு கொடுக்க முடியும்? இதனை இன்று செய்தால் இந்த பிள்ளை உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் என மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பிள்ளையும் தாய்க்கு எதிராக வழக்கும் தொடுக்கும். அம்மா என்னோடு நேசமில்லை! அம்மா என்னை கவனிப்பதில்லை! அவனுக்குத்தான் எல்லாம், எனகில்லை! இந்த வசனங்கள் இன்று சாதாரணமானவை. இது இப்படியிருக்க ஏன் ஈசாக்கினால் தலைச்சான் உரிமையை முறையானவருக்கு திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதற்கான விடை ஈசாக்கிற்கு மட்டும்தான் தெரியும்.
எசா தன்னுடைய தலைச்சான் ஆசிருக்காக போராடித் தோற்றான் இதனால் சினம் கொண்டான். இன்று நிச்சயமாக நம்முடைய பிள்ளைகள் ஆசீருக்காக போராடுவார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் பணத்திற்காகவும், வீடுவாசலுக்காவும், நிலத்திற்காகவும் நிச்சயமாக போராடுவார்கள். கிடைக்கவில்லை என்றால், அவர்கள் பெற்றோர்கள் இதற்கான பலனை அவர்களுடைய முதிர் வயதில் நிச்சயமாக சந்திப்பார்கள், சந்திக்கிறார்கள் !!!!.
கடவுள் தலைச்சான் பிள்ளையின் உரிமையை இளைய பிள்ளைக்கு கொடுத்தாரா, அல்லது இளைய பிள்ளை தலைச்சான் பிள்ளையை வஞ்சித்ததை சகித்தாரா? என்று ஆசிரியர் தொளிவாகக் காட்டவில்லை. இருப்பினும் இளைய பிள்ளைதான் இந்த கதையின் கதாநாயகன் என்பது மட்டும் தெளிவாகிறது. குடுமபத்திலே ஏன் பிள்ளைகளுக்குள் பராபட்சம் காட்டப்படுகிறது என்பதற்கும் இன்னும் விடைகாணப்படவில்லை. பாரபட்டசம் என்று நாம் கருதுவது உண்மையில் பாரபட்சமா? அல்லது பாரபட்டசம் இல்லாத வாழ்க்கை ஒன்று சாத்தியமா என்பதும் தெளிவில்லை.
பாரபட்சம் இல்லாத வாழ்வு சாத்தியமில்லை, அத்தோடு மன்னிப்பில்லாத சகோதரத்துவமும் நிலையில்லை என்பது போல தோன்றுகிறது. எது எப்படியாயினும் எசா தன் அம்மாவாலும், சகோதரனாலும் வஞ்சிக்கப்பட்டதை சகிக்க முடியவில்லை. நானும் ஒரு இளைய சகோதரனாக இதனை அங்கீகரிக்கவும் முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக