திங்கள், 10 ஜூலை, 2017

தீட்டுப்பட்டவள்! Accursed!

 திங்கள், 10 ஜூலை, 2017
தீட்டுப்பட்டவள்!
கடவுள் யாரையும் வஞ்சிப்பதில்லை, யாரும் தீட்டுப்பட்வர்கள் இல்லை என்று பலமுறை உறுதியாக மறையுரையாற்றிய போதும், சில வேளைகளில் நான் சந்தித்த நடைமுறைச் சவால்கள் என்னை ஆழமாகச் சிந்திக்க தூண்டுகின்றன. இதில் மிக முக்கியமாக, குழந்தை பேறு இல்லாமல் 
இருக்கிறவர்களை சந்திக்கின்றபோது, அவர்கள் சந்திக்கின்ற துன்பங்களை, வசைமொழிகளை பார்க்கின்றபோது கடவுள் சிலரை இப்படியா தண்டிப்பார்? என்றும் எண்ணத்தோன்றுகிறது, மனித பார்வையில்.
இஸ்ராயேல் உலகமும் சரி, இயேசு கால பாலஸ்தீன உலகமும் சரி மானிட இயற்கை சிக்கல்களை, அதிகமாகவே ஆண்மீகப்படுத்தினார்கள் அல்லது தெய்வீக சாயல் கொடுக்க முயன்றார்கள் எனலாம். உலர் பிரதேசங்களில் கால்நடை வளர்த்தும், நாடோடி வாழ்க்கை வாழ்ந்த இவர்களுக்கு உடலியல் மற்றும் உளவியல் நோய்கள் சாதாரண நோய்களாக மட்டும் தெரியவில்லை, மாறாக அவை கடவுளின் தண்டனையாகவே தோன்றின. அக்காலத்திலே பல நோய்கள் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் அவை பெயரில்லாமல் தாக்கத்தில் இருந்தன. இந்த பெயரில்லாத கொடிய நோய்களை தீய சக்தியின் ஆளுகை எனவும், கடவுளின் தண்டனை எனவும் மக்கள் கருதினது மட்டுமல்லாமல், இவற்றால் வருந்தியவர்களை, துரத்தியும் விட்டனர். முக்கியமாக தொழுநோய் போன்று, அக்காலத்தில் குணமாக்க முடியாமல் இருந்த நோய்கள் தொற்றக் கூடிய நோய்களாகவும் இருந்தன. இதனால் மற்றவர்களை காக்க, நோயாளிகள் நகருக்கு வெளியில் துரத்தப்பட்டு தனிமையில் மடியவிடப்பட்டார்கள். இவர்கள் குகைகளிலும், பாலைவன நீர்நிலைகளின் அருகிலும் வாழ்ந்தார்கள்
நகருக்குள்ளும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து துன்புற்றுக்கொண்டிருந்தார்கள்இரத்தப் போக்கு என்பது ஒரு நோய் அல்ல, மாறாக அது ஒரு உடல் பலவீனம் என்று மருத்துவம் இன்று கண்டுபிடித்திருக்கிறது. அதற்கு பல மாற்று சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. இது இரத்தம் கட்டுப்படுத்தபட முடியாமல், நாடியிலிருந்து வெளியேறுவதைக் குறிக்கும். சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் இந்த உடலியில் துன்பத்தை சந்தித்தார்கள். சாதாரண மனிதர் தன்னுடைய குருதி அலகில் 10-15 வீதமான இரத்த போக்கை சந்திக்கலாம், ஆனால் அதற்கு மேலாக அவர் இரத்த போக்கை சந்தித்தால் அது மரணத்தை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில் உடலின் உள்பாகங்களிலும் இந்த இரத்த போக்கு சாத்தியமாகிறது, இந்த வகையான இரத்த போக்கு மிக மிக ஆபத்தானது
இப்படியாக பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான இரத்த போக்கை சந்தித்த ஒரு பெண் இயேசுவின் ஆடையை தொட முயற்ச்சி செய்கிறாள். பன்னிரண்டு என்பது அதிகமான ஆண்டுகளை குறிக்கிறது. இவர் எப்படி இந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இதனை சந்தித்தும் உயிரோடு இருந்தார், என்ற கேள்வியும் நமக்கு எழலாம். யூதர்கள் இரத்தத்தை உயிரின் உறைவிடமாக கருதினார்கள், இதனால்தான் அவர்கள் இரத்தத்தை உண்பதோ, குடிப்பதோ கிடையாது. இந்த பெண்ணின் இரத்த போக்கு நிச்சயமாக இவரை தீட்டுப்பட்டவராக காட்டியிருந்திருக்கும். இவர் சபிக்கப்பட்டவராக கருதப்பட்டிருந்திருப்பார். இப்படியிருக்க இவர் ஆண்களின் கூட்டத்திற்குள் வர நினைப்பதே இவரை ஒரு வீரப் பெண்ணாக காட்டுகிறது. வந்தது மட்டுமல்ல இவர் ஒரு இளம் இராபியின் ஆடையின் விழிம்பை தொடமுயற்சி செய்கிறார். (மத்தேயு 9,18-26). லேவியர் சட்டப்படி இரத்த போக்குள்ளவர்களையும், இறந்த உடலங்களையும் சாதாரண மனிதர்கள் தொடக்கூடாது. இங்கே இவள் ஆண்டவரை தொட்டாள் என்பதைவிட, ஆண்டவர் இவரை தொடவிட்டார் எனவும் கருதலாம்.  
ஆடையின் விழிம்பு என்பது ஒருவருடைய புனிதத்தன்மையைக் காட்டுகிறது. இவளின் தொடுகை ஆண்டவரை திரும்பிபார்க்க வைக்கிறது. ஆக உண்மையில் இங்கே நோயாளி இல்லாமல் இருந்தவர், இவள் ஒருவர்தான் என்பது புலப்படுகிறது
இந்த உலகில் சுகமானவர்கள் என்று யாரும் கிடையாது, அனைவரும் நோயாளிகளே. அளவு மாறுபடுகிறது அன்றேல் அனைவருக்கும் நோய்கள் இருக்கின்றன. ஆரோக்கியசாலிகள் என்று யாரேனும் இருந்தாலும், அவர்களும் எதிர்கால நோயாளிகளே. நோயாளிகளாக இருக்க கவலைப்பட வேண்டிய தேவையில்லை ஏனெனில் நோயாளிகள்தான் வீட்டிலும், வைத்தியசாலையிலும், நாட்டிலும் விசேட கவனிப்பை பெறுகிறவர்கள். இதனால் நோயாளிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, இன்றைய நம் நண்பி, இந்த இரத்தபோக்குடைய பெண்ணைப் போல
ஆசீர் என்பதை மட்டுமே கடவள் கொடுக்கிறார் சாபத்தை அல்ல, என்பது சரியாக புரிகிறது

மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...