செவ்வாய், 11 ஜூலை, 2017

துரோகம்! Betrayal


புதன், 12 ஜூலை, 2017

துரோகம்!

காட்டிக்கொடுப்பு-துரோகத்திற்கும் தமிழருக்கும் இடையில் நெருங்கிய உறவு இருப்பதாகச் சொல்வார்கள். இதனை எட்டப்பன் காலம் தொடங்கி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் வரை தொடர்பு படுத்தி பார்க்கிறவர்களும் உண்டு. ஆரம்பத்தில் தமிழ் ஈழம் என்று  நாட்டைக் கேட்டு போராடியவர்கள், இன்று எந்த விதமான சுயநிர்ணய உரிமைகள் மற்றும் அதிகாரங்ககளும் இல்லாத ஒரு மாகாண சபையைக் கூட, தமிழ் தலைமைகளால் நடத்த முடியவில்லையே என்று வருத்தப்படுகிறவர்கள் ஒருபுறம் இருக்க, இதனைப் பார்த்து இது தமிழரின் பிறவிக்குணம் என்று சிரிப்பவர்கள் இன்னொருபுறம் இருக்கிறார்கள். இப்படித்தான் தற்கால அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற சிலர் ஆய்வுசெய்கிறார்கள். 'துரோகிகள்' என்று சொல்லி அரசியல் நடத்துபவர்கள், சமயங்களை வளர்க்க முயல்கிறவர்கள், அவர்களே துரோகிகளாக மாறுவதை உலக வரலாறு பல யுகங்களாக கண்டு கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முடிவில்லை போல, இப்படியிருக்க தமிழ் இனம் மற்றும் இதற்கென்ன விதிவிலக்கா என்று எண்ணத்தோன்றுகிறது
இன்றைய முதல் வாசகம், சகோதரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு பின்னர் கடவுளால் உயர்த்தப்பட்டு, முழு எகிப்திற்குமே அதிபதியாகிய உண்மையான எபிரேய மகன், யோசேப்பின் வாழ்க்கையை காட்டுகிறது. யோசேப்பிற்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையிலான உரையாடல் பல முகங்களைக் கொண்டுள்ளது (காண்க தொடக்க நூல் 41- 42). தன்னை அவமானப்படுத்தி, ஆடையில்லாமலாக்கி, அன்நியருக்கு விற்று, இதனால் பலவிதமான துன்பங்களைக் கொடுத்த தன் உடன் கருவறை சகோதரர்களைக் கண்டபோது யோசேப்பிற்கு எப்படியிருந்திருக்கும? சாதாரண மனிதராக அவர், இவர்களை பலமாக தண்டித்திருப்பார். இருப்பினும் யோசேப்பு இவர்களை மென்மையாக தண்டிக்கிறார். துன்பம் என்றால் என்ன, சிறைவாசம் என்றால் என்ன, பயம் என்றால் என்ன என்று யோசேப்பின் சகோதரர்கள் உணர்கிறார்கள்
வாழ்க்கை ஒரு வட்டம் இங்கே யாருக்கும் எதுவும் நிரந்தரம் கிடையாது, இன்று என்னுடையது, நாளை இன்னொருவருடையது. நான் ஒருவருக்கு செய்யும் துன்பம் இன்னொரு விதத்தில்  நாளை என்னை வந்தடையும் என்பதை, ஏனோ மனம் ஏற்க தயங்குகின்றது. இதனால் தவறுகளும், துரோகங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. துரோகிகளை யோசேப்பு மென்மையாக தண்டித்து திருத்தினார், சாதாரண மனிதர்கள், துரோகிகளை தண்டித்து பின்னர், சில வேளைகளில் அவர்களும் துரோகிகளாக மாறுகின்றனர். இயேசு துரோகிகளை தண்டிக்காமல் கூடவைத்திருந்து, தவறு செய்தபோது தன் பார்வையாலே அரவணைத்து, அவர்களை கதாநாயகர்கள் ஆக்கினார். இயேசுவின் நண்பர்களே அவரை விட்டு ஓடினார்கள், சிலர் அவரை காட்டிக்கொடுக்க, சிலர் அவரை மறுதலித்தார்கள். இவர்களை மீள அரவணைத்து, அவர்களைக் கொண்டே தன் திட்டத்தை நிறைவேற்றிய இயேசுவின் மனிதத்தை என்னவென்று சொல்வது
துரோகி என்பவர் யார்? யார் துரோகியாகிறார்? ஏன் துரோகியாகிறார்? இதற்கு காலமும் நேரமும்தான் விடை சொல்லவேண்டும், இருந்தாலும் அந்த விடை எல்லோருக்கும் பொருந்தாது. இன்று என் நண்பன் துரோகி, நாளை நானும் அவனுக்கு துரோகியாகலாம். நண்பர் துரோகியாகலாம், ஆனால் துரோகியை மீண்டும் நண்பனாக்கினால் அந்த நட்பு பொய்க்காது என்பதுபோல தோன்றுகிறது. மற்றவரை துரோகி என்று சொல்ல நான் யார்? நானும் பல வேளைகளில் துரோகியே, எனக்கும் மற்றவருக்கும்!!!
நலம் உண்டாகட்டும்

மி. ஜெகன்குமார் அமதி

வசந்தகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...