நடிக்கத் தெரியாத ஹீரோ!
சின்ன வயதிலிருந்தே தோமையாரை சந்தேப் பேர்வழி, மனமாறியவர், முதலில் நம்பாதவர் என்று சொல்லித்தந்ததுதான் நினைவில் இருக்கிறது. இந்த தோமையாரின் திருநாள் இன்று. யாழ்ப்பாணத்தில் மட்டும் பல கோயில்கள் தோமையாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மாதகல் அன்பு பங்கு மக்கள் இவரை தோமையப்பர் என அன்போடு அழைக்கிறார்கள். அதாவது தங்கள் அப்பராக (தகப்பன்) பார்க்கிறார்கள்.
அப்படியென்ன தவறு செய்தார் இந்த ஹீரோ. ஏன் இவரை நம்பாதவர் என்கிறார்கள், அப்படி இவர் எதைத்தான் நம்பவில்லை? இப்படியாக பல கேள்விகள் சின்னவயதில் இருந்தே என்னுள் எழுகிறது. தோமா தன் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை நம்பவில்லை என்று சொல்லவில்லை, மற்ற சீடர்கள் சொன்னதைத்தான் நம்பவில்லை. இந்த சீடர்களும் நம்பிக்கையில் திழைத்தவர்கள் அல்ல. முதல் முதல் பெண்களுக்குத்தான் இயேசு தோன்றினார், இந்த பெண்கள் அதனை சொன்னபோது இவர்களும் நம்பவில்லை தானே. அதெப்படி தோமாவிற்கு மட்டும் நம்பாதவர் என்ற பட்டப்பெயர் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
தோமா நம்பவில்லை அதனை வெளிப்படையாகவே சொன்னார். தன் இதயத்திற்கு உண்மையாக இருந்தார். இதனால் இயேசுவை கண்டார், இன்று திருச்சபையின் விசுவாசமான 'என் ஆண்டவரே என் கடவுளே' என்ற வரி தோமையாருடையது என்பது எவ்வளவு அழகானது. இன்று உலகிலே பல விடயங்கள் பலருக்கு தெரியாது, தெரிவது போல நடிக்கிறோம். ஆங்கிலம் தெரியாது, கதைக்க விருப்பம், இதனால் தமிழை ஆங்கிலம் போல கதைத்து, தமிழ் செய்திகளைக் கூட ஆங்கில (இலத்தின்) எழுத்துக்களில் எழுதி இன்பம் காண்கின்றோம். Eppadi sugam, Vanakkam (எப்படி சுகம். வணக்கம். ) ஏனென்றால் நடிகர்களுக்கு பால் ஊற்றி, நடிப்பை நிஜமாக்கி, நிஜத்தை பலவீனமாக பார்க்க பழகிக்கொண்டோம்.
கடலில், வயலில் அப்பாவின் தியாகம் நிறைந்த சாகசம் தெரிவதில்லை, ஆனால் திரையில் பாகுபலி சாகசங்கள் உண்மையாய் தெரியுது. சொந்த அண்ணா அக்காவிற்கு குட்மோர்னிங் (வணக்கம்) கிடையாது, நடிகர்கள் அண்ணா, தலை, தலைபதியாகிறார்கள்.
அனைவரையும் திருப்திப்படுத்தி படுத்தியே வாழ பழகிக்கொண்டோம். அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்று எண்ணி எண்ணியே, நான் என்ன நினைக்கிறேன் என்பதை மறந்துவிட்டேன். மற்றவரை திருப்பதிப்படுத்த முயன்று முயன்றே என் மனசாட்சியையும் இதயத்தின் நிம்மதியையும் சந்தோசமாக மழுங்கடிக்க பழகிக்கொண்டேன்.
இதனால் தோமா சந்தேகப்பட்டார்தான் ஆனால் அவர் உண்மையானவர் என்று இன்று புரிகிறது.
ஜெகன்குமார் அமதி
அமைதியகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக