ஞாயிறு, 2 ஜூலை, 2017

வாளோடு வருவாரோ, அமைதியன் அரசர்!

ஞாயிறு, 2 ஜூலை, 2017
வாளோடு வருவாரோ, அமைதியன் அரசர்!

அன்பு நண்பர், அருட் தந்தை அகஸ்டின் புஸ்பராஜா அடிகளின் பங்கில், (கோமரசன் குளம்-பரலோக மாதா ஆலயம், வவுனியா) இரண்டு திருப்பலிகள் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அழகான பங்கு அமைதியான பங்கு மக்கள். உரோமை தந்த விவிலிய அறிவும், எருசலேம் தந்த எபிரேய அறிவும் இவர்களின் சாதாரண விசுவாசத்தின் முன்னால் கைகட்டி நிற்கும். இன்றைய வாசங்கங்களைப் பற்றி பதினைந்து பக்கங்கள் விவிரிவுரையும், விளக்கமும் எழுதினாலும்  கூட இவர்களுக்கு மறையுரையாற்ற மீண்டுமொருமுறை வாசகத்தை வாசித்தேன். ஆண்டவருடைய இந்த வார்த்தைகள், 'நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.' (மத்தேயு 10,34) என்ற வரி மீண்டும் மீண்டும் சிந்தையையும், எண்ணத்தையும் உருத்துகிறது. இயேசு அமைதியன் அரசரல்லவா, எப்படி வன்முறையின் அடையாளமான வாளை ஆதரிக்க முடியும். எப்படி இந்த இரக்கத்தின் கரங்களால் வாளை ஏந்த முடியும்?
இந்த கேள்விகளுக்கு மத்தேயுவும் அவர் கால திருச்சபையும் தான் பதில் சொல்ல முடியும். எங்களுடைய மூத்த அமல மரித் தியாகி அருட் தந்தை செல்வம் சொல்லியது நினைவிற்கு வருகிறது. இந்த உலகில் அதிகமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை 'அமைதி' (சமாதானம்). அமேரிக்காவின் சமாதானத்திற்கான போர், அல்லது இலங்கையின் அமைதி மற்றும் நல்லினக்கத்திற்கான போர் போன்ற சிந்தனைகள் இதற்கான நல்ல பின்னுதாரணங்கள்
நான் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டேன், நீ என்னை ஒன்றும் சொல்லாதே, என்ற வரிகள் அல்லது நம்முடைய வைகப் புயல் வடிவேலின் வார்த்தைகள் 'இந்த ஏரியாவைத் தாண்டி நானும் வரமேட்டேன் நீயும் வரக்கூடாது' என்ற வரிகள்தான் இந்த உலகத்தின் அமைதியை நக்கலாக அடையாளப்படுத்துகின்றன. இன்று அமைதி என்றால் என்ன? அநியாயம் அக்கிரமம் நடந்தாலும், சமூக கட்டமைப்பிறக்காக, அமைதி என்கின்ற இந்த மாயைக்காக, அமைதியாய் இருப்பதா? மாட்டிறைச்சி சாப்பிடாய் என்று மாட்டு அரசியல் நடத்தும் மனித மிருகங்களை ஆதரிப்பதா? அல்லது அவர்களால் துன்புறும் ஏதிலிகளை ஆதரிப்பதா? தெய்வநிந்தனை எனச் சொல்லி, கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக, கண்ணுக்கு தெரியும் சகோதர தெய்வங்களை வதைப்பவர்களை ஆதரிப்பதா? அல்லது மதத்திற்காக மதம் பிடித்த மனநோயாளிகளை ஆதரிப்பதா? பிக் பாஸ் எனச்சொல்லி குளியலறையிலிருந்து கட்டிலறைவரைக்கும் அந்தரங்கங்களை காண்பிக்கும் நிகழ்வுகளை ஆதரிப்பதா? அல்லது, ஊடக சுதந்திரம் மற்றும் பொழுதுபோக்கு என்று சொல்லி அமைதியாக இருப்பதா? ஆதரித்தால் அமைதிவாதி, இல்லாவிட்டால் போராளியா?
இயேசுவிற்காக போராளியாய் இருக்கலாம், உலக மாயைநிறைந்த அமைதியைப் பார்கிலும். இயேசுவின் வாள்தான் உண்மையான அமைதியை தரும் என நம்புகிறேன். இந்த வாள் மனிதத்தையோ அல்லது உலகத்தையோ அழிக்கவல்ல, மாறாக அவற்றிக்கு புத்திசொல்லவே தீட்டப்படுகிறது. இது அழிக்காது ஆனால் அளிக்கும். ஒவ்வொரு உண்மைக் கிறிஸ்தவரும் போராளியே!

ஜெகன்குமார் அமதி
அமைதியகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...