வியாழன் 20.11.2025
'உங்கள் இதயத்தை கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்' தி.பா 95:8
அ. இஸ்ராயேலின் தலைநகர் எருசலேம்:
יְרוּשָׁלִַ֗ם Ιεροσόλυμα எருசலேம், ஆண்டவருடைய காலத்தில் சமயம், கலாச்சாரம், மற்றும் வணிகத்தின் தலைநகராக விளங்கியது. இது ஒரு கானானிய நகர் அத்தோடு உலகத்தின், உலக மனித வரலாற்றின் மிக பழமையான நகரும் கூட. கி.மு சுமார் 4000 ஆண்டுகளில் முதன்முதலாக மனிதர்கள் இங்கே குடியிருக்க தொடங்கியிருக்க வேண்டும். எபுசியர் என்ற கானானிய மக்கள் இனம் இங்கே வாழ்ந்தனர். தாவீது இவர்களிடமிருந்து இந்த நகரை கி.மு 1000 ஆண்டளவில் இரத்தமும் வன்முறையும் இன்றி கைப்பற்றினார். இதனை தன்னுடைய அரச-சமய தலைநகராக மாற்றினார், சாலமோன் அரசர் இங்கேதான் இஸ்ராயேலர்களின் ஒரே ஆலயத்தைக் கட்டினார். இந்த எருசலேம் தேவாலயம் கி.மு 957ம் ஆண்டளவில் பபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. பின்னர் எருசலேம் மக்கள் பெரும்பாலனவர்கள் பபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் சுமார் கி.மு 516 ஆண்டளவில் எருசலேமிற்கு திரும்பி வந்து, ஆலயத்தை இரண்டாம் முறையாக கட்டினார்கள். கிறிஸ்து ஆண்டவரின் பிறப்பிற்கு முன்னர், ஏரோது அரசன் இதனை அழகுபடுத்தி பெருப்பித்தான். இயேசு ஆண்டவர் இந்த ஆலயத்தின் காலத்தில்தான் தன் இவ்வுலக வாழ்வை தொடங்கி நிறைவு செய்தார். ஆரம்ப கால திரு அவைக்கும் இந்த ஆலயம்தான் பிறப்பிடம். யூத கிளர்ச்சியை காரணம் காட்சி உரோமைய அடக்குமுறை இராணுவம் இந்த ஆலயத்தை கி.பி. 70 ஆண்டளவில் இடித்து தரைமட்டமாக்கி எரித்தனர். பின்னர் 135ம் ஆண்டளவிலும் இந்த ஆலயம் உரோமையரால் இரண்டாம் முறை அழிக்கப்பட்டது.
எருசலேம் நகரை கிறிஸ்தவ பேரரசர், கொன்ஸ்ரன்ரைன் தன் முக்கியமான நகராக அங்கிகரித்தார். அதனால் இது திருப்பயணிகளின் மிக முக்கியமாக நகராக மாறியது. இந்த நகரில் பல ஆலயங்கள் இக்காலத்தில் அமைக்கப்பட்டன. இந்நகரின், ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் மிக முக்கியமான ஆலயமான ஆண்டவரின் கல்லறை பெருங்கோவில் கட்டப்பட்டது,
இதுமட்டுமே இன்றளவும் உள்ளது. கி.பி. 7ம் நூற்றாண்டில்,
எருசலேம் தேவாலயம் இருந்த இடத்தில் இஸ்லாமியர்களின் தங்களது இரண்டாம் மூன்றாம் நிலை புனித மசூதிகளை இந்த வளாகத்தில் கட்டினார்கள். இவை இன்றும் உள்ளன. இப்படியாக எருசலேம் இஸ்லாமியர்களின் புனித இடமாக மாறியது.
எருசலேம் நகர், பைசாந்தியர், இஸ்லாமியர், சிலுவைவீரர்கள்,
ஒட்டமான் வீரர்கள் என்று பலருடைய கரங்களுக்குள் மாறி மாறி வீழ்ந்தது. 1917ம் ஆண்டு இந்த நகரை பிரித்தானியர்கள் கைப்பற்றினார்கள். 1948ம் ஆண்டு இஸ்ராயேலர்கள் நங்கள் நாட்டை இந்த நகரில் பிரகடனப்படுத்தினார்கள். இன்று எருசலேம் மனித இனத்தின் வளர்ச்சி மற்றும் கலாச்சார-மத நம்பிக்கையின் இடமாக திகழும் அதேவேளை, அதிக இரத்தம் சிந்தப்பட்ட, அமைதி இழக்கப்பட்ட, வன்முறையால் அழிவடைந்த நிலத்தின் அடையாளமாகவும் உள்ளது. இருந்தும் இதன் பெயர், அமைதி, தாவீது, இயேசு மற்றும் கடவுளின் நகர்.
ஆ. கடவுளின் கண்ணீர்:
இயேசு கண்ணீர்விட்ட உதாரணங்கள் விவிலியத்தில் உள்ளன. அதில் அவர் எருசலேமை நோக்கி கண்ணீர்விட்டது உற்று நோக்கப்பட வேண்டும். ஏன் கடவுள் கண்ணீர் விடுகிறார்? அது அமைதியை அறியவில்லை என்பதுதான் அவருடைய ஆதங்கம். இன்னும் எருசலேம் அமைதியை அறியவில்லை, அறிய முயற்சி செய்யவும் இல்லை.
இ. ஆரம்பகால திருஅவை மறையுரைஞ்ஞர்கள், தந்தையர்கள், திருச்சபையை புதிய எருசலேமாகக் கண்டார்கள். திருஅவை என்றால் ஒவ்வொரு திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவரையும் அது குறிக்கும். இந்த நகருக்கு அடையாளம், அதில் உள்ள கற்களோ அல்லது நினைவுகளோ அல்ல, மாறாக அங்கே வாழந்த, வாழும் மக்கள். எருசலேம் பலமுறை அழிக்கப்பட்டு கட்டப்பட்டது,
மீண்டும் கட்டப்படும். எதிர்காலத்தை யார் அறிவார். ஆனால், புதிய எருசலேமாகிய நம் ஆன்மாக்கள், ஏன் அதன் ஆண்டவரை கண்டுகொள்வதில்லை.
இந்த நுண்ணறிவு யுகத்தில் கடவுளின் இடம் முழுமையாக மறைந்தே போய்விட்டது. ஒரு சிலர் கடவுளின் பெயரால் பத்திமுறைகளையும், வெற்று சடங்குகளையுமே அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப் பார்க்கிறார்கள்,
அதுவும் இளையோர் கடவுளை அறியாமல் போவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எருசலேம் என்ற நம் ஆன்மாக்களை கைப்பற்ற உரோமையர்கள், பபிலோனியர்கள்,
ஒட்டமான்கள் என பலரும் வந்துதான் போவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக