Friday, February 2, 2018
ஓ'நாய்கள்
இது ஓநாய் என்கின்ற விலங்கிற்கு எதிரான பதிவல்ல மாறாக, விலங்குகளாக மாறியிருக்கும் மனிதர்களுக்கு எதிரான பதிவு.
கடந்த சில நாட்களாக யாழ் நகர் கள்வர்களின் வன்முறையில் சிக்கி தவிப்பதை பார்க்கமுடிகிறது. பூனைகள் இல்லாத வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டமாம் என்கின்ற முதுமொழிக்கு ஒப்ப, அநாகரீகமும், போதைபொருள்களுக்கு அடிமையான வாழ்வும் யாழில் தலைவிரித்தாடுவதை பார்க்கலாம்.
தென்றலுக்கு கதவுகளைத் திறந்து வைத்து தூக்கிய காலம் போய், பகலிலும் கதவை பூட்டி வைத்து, தூங்காமல், வீடியோ கமராவை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அசிங்கமான கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
திருடர்கள் வருகிறார்கள். இவர்கள் யார்? நம்பிள்ளைகளா அல்லது நம் 'நண்பர்கள்' பிள்ளைகளா? அல்லது குழம்பிய குட்டையில் தமிழ் இரைதேடும் விலங்குகளா? சொல்ல தெரியவில்லை. இந்த மூன்றுக்கும் வாய்ப்பிருக்கிறது போலத்தான் தெரிகிறது.
திருடர்கள் திருடுவார்கள், இவர்கள் திருடிவிட்டு மனிதர்களை கொலையும் செய்கிறார்கள், துரத்தியும், ஒழிந்திருந்து தாக்குதல் நடத்துகிறார்கள். நம் வீட்டிற்குள் வந்து, நம் சொத்துக்களை சூறையாடி நம் உறவுகளை இரத்தில் மிதக்க வைக்கிறார்கள்.
இதற்கு என்ன பதில். சமூக தலைவர்கள் இதனைப் பற்றி என்ன சிந்திக்கிறார்கள் என்று புரியவில்லை. கிறிஸ் கள்ளன் போய், திருட்டு பிசாசுகள் இப்போது, நடுநிசியில் இரத்த வெறி பிடித்து அலைகின்றனவே. இவர்களை யார் கட்டுப்படுத்துவது???
யாரையும் நம்பி வேலையில்லை, நாமாக நம்மைக் காத்தால்தான் முடியும் போல!!!
ஒப்பிட: மாற்கு 6,34: அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
ஓநாய்களிடமிருந்து மந்தையை காப்பாற்றும் ஆண்டவரே!
ஓநாய்களை விரட்ட மந்தைக்கும் சற்று சொல்லி கொடும் ஆண்டவரே!
'திருடர்களால்' இறந்து போன சகோதரரிகளுக்கு சமர்ப்பணம்.
M. Jegankumar OMI
Vasanthagam, Jaffna
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக