வெள்ளி 21.11.2025
'நீங்கள் என் இல்லத்தை கள்வர் குகையாக்கினீர்கள் லூக்கா 19:46'
கள்வர்களின் குகையாகும் தேவனின் இல்லங்கள்:
அ. ஆலயங்கள்
தேவனின் வீடு –
இந்த உலகம் கடவுளின் வீடு, கடவுளின் பிரசன்னத்தால் இந்த பூவுலகம் நிறைந்துள்ளது. மனிதர்கள் கடவுளை நெருக்கமாக உணர தொடங்கியபோது, தங்களுக்குள்ளும், தங்கள் வாழ்வியலுக்குள்ளும் பல கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். இந்த வரலாற்றில் குருத்துவம் மெல்ல மெல்ல கடவுளையும் மனிதரையும் இணைக்கும் பாலமாகவும், மக்களை ஆசீர்வதித்து, அவர்களின் சுகதுக்கங்களில் உடன் இருக்கவும் உருவாகியது. இந்த குருத்துவம் இன்றைய நிலையை எடுக்க பல ஆயிரம் ஆண்டுகளை உருவாக்கத்திற்காக எடுத்திருக்கிறது. குருத்துவத்திற்கு அடையாளம் அது போதிக்கும் கடவுளும், அது சேவைசெய்யும் மக்களேயாவார். கடவுள் இல்லா, மக்கள் இல்லா குருத்துவம், ஒரு பொய், வெற்றுச் சடங்கு, மிக ஆபத்தானது. மனித வரலாற்றிலே குருத்துவமும், குரு பணியை சார்ந்த அனைவரும் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள், மக்களை அபிவிருத்தி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதற்காக குருத்துவத்திற்கும், அதன் தலைவராகிய கடவுளுக்கும், குருத்துவத்தை கொடுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். அதே வேளை, இந்த குருத்துவத்தின் பெயரால் நடந்த வன்முறைகள், துஸ்பிரயோகங்கள், கட்டுக்கதைகள், பிற்போக்குதனமாக சிந்தனைகள், மூட நம்பிக்கைகள், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் நிச்சயமாக மனதில் இருக்கவேண்டும், அது தொடராமல் இருக்க.
குருத்துவமா? ஆலயமாக முதலில் உருவானது. இது கோழியாக முட்டையா முதலில் வந்தது என்பது போல. பொதுவெளியில் கடவுளைக் தியானித்த மனிதர், மெதுமெதுவாக கடவுளை சந்திக்க பல கூடாரங்கை உருவாக்கினர். அவை ஆலயங்களாகி, திருத்தலங்களாக மாறின. ஆலயங்கள் நிச்சயமாக தேவை, ஆனால், கடவுள் இல்லாத, சக மனிதர்களை புறந்தள்ளுகின்ற, வியாபார நிலையங்களாக மாறிப்போன ஆலயங்கள், வெறும் மண்டபங்களே. அத்தோடு அவை ஆபத்தானவையும் கூட. இயேசு ஆண்டவர்தான் குருத்துவத்தின் மகிமை, ஆலயத்தின் அடையாளம். அவரின் குருத்துவம் மிக வித்தியாசமானது. அவர் குருத்துவத்தை உருவாக்கினார் என்பதை விட, குருத்துவத்திற்கு குருப் பட்டம் கொடுத்தார் என்பது மிக அழகாக இருக்கிறது. இதனை இறையியலாக பார்க்கதேவையில்லை, ஆன்மீகமாக பார்க்கலாம்.
ஆ. ஆலயத்தை சுத்தப்படுத்தும் தேவன்:
எருசலேம் தேவாலயத்தில் பல பகுதிகள் இருந்தன. வெளிமுற்றத்தில்தான் வியாபாரம் நடைபெற்றது. நீர் வளமற்ற எருசலேம் வளமாக இருந்ததற்கு காரணம் இந்த ஆலயம்தான். உண்மையாக இங்கே வியாபாரம் மக்களுக்காகவே செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான காணிக்கை பொருட்கள் இங்கே வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் மூலமாக கடவுளை திருப்திப்படுத்தலாம் என மக்கள் அன்றும் இன்றும் நம்புகிறார்கள். ஆனால் இந்த வியாபாரம், மக்களுக்கு எதிராக திரும்பி, அவர்களை சூறையாடும் போது அது கடவுளுக்கு எதிராக திரும்புகிறது. கடவுளே அதனை அருவருத்து சாட்டையால் அடித்து துரத்தும் அளவிற்கு போய்விடுகிறது.
இயேசுவின் காலத்தில் காணிக்கை பொருட்கள், பன் மடங்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கலாம். நாணய மாற்று வேலையில் மக்கள் பல துன்பங்களை சந்தித்திருந்திருக்கலாம். வெளியல் உரோமைய கொள்ளை நாணயம், உள்ளே யூதேயாவின் பெறுமதியில்லா நாணயம். ஏழைகள் என்ன செய்வார்கள்? இயேசப்பாவின் கோபத்திற்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம், அல்லது அடையாளமாகக்கூட இயேசப்பா இதனை செய்திருந்திருக்கலாம்?
இ. கற்றுக்கொள்ளும் பாடம்:
ஆலயத்திற்கு அழகு அதன் கட்டட பாணியோ, கலை நயமோ, உயரமோ, வயதோ, அங்குள்ள பொருட்களோ அல்ல. ஆயலத்திற்கு அழகு, அங்கிருக்கும் கடவுள். கடவுள் இல்லா ஆலயம், ஒரு மண்டபம், ஏன் போய்வீடாகக்கூட மாறலாம்.
மக்களை வரவேற்காத, மக்களை கண்ணீர் சிந்த வைக்கும், பாகுபாட்டை ஊக்குவிக்கும், கடவுள் பெயரில் மானிடத்திற்கு எதிரான சிந்தனைகளை முன்வைக்கும், நீதியும் அன்பிரக்கவும் இல்லா ஆலயங்கள், நிச்சயமாக சுத்தப்படுத்தப்படும், சில வேளை அதனை கடவுளே செய்யலாம். தந்தையின் இல்லம் கள்வர் குகையாக மாறுவது சாத்தியம். இதன் மட்டில் குருக்களும், துறவிகளும், முக்கியமாக இறைமக்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். தாவீதிடம் கடவுள் 'என்னை உன் ஆலயத்திற்குள் அடக்கப்பார்க்கிறாயா?' என்று கேட்டார், ஆனால் சாலமோனின் ஆலயத்திற்குள் அவர் பிரசன்னமானார். ஆக ஆலயம் முக்கியமல்ல, மாறாக அங்கிருக்கும் இறைபிரசன்னமே முக்கியம்.

