சனி, 28 அக்டோபர், 2017
கடன் சுமைகள்:
சில தினங்களுக்கு முன், அரியாலையில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட நம் உறவுகளை நனைக்கும் போது மௌமாக இருக்க முடியவில்லை. முப்பது வருடங்கள் போரின் வடுக்களை தாங்கி வந்துள்ளோம். பல இடப்பெயர்வுகளை தாண்டிவந்தோம், பல காட்டிக் கொடுப்புக்களை, பல துரோகங்களை, பல கொள்ளையடிப்புக்களை சந்தித்தோம். பலவாறு அவமானப்படுத்தப்பட்டோம், சொந்த நிலத்திலே அகதிகளாக்கப்பட்டோம், சொந்த நகரத்திலே சோதிக்கப்பட்டோம். புரியாத மொழியால் கேள்வி கேட்கப்பட்டடு அதே மொழியால் விடையளிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டோம். இருந்தபோதும் மனம் சோராமல் பயணம் செய்தோம், சில உயிர்களையாவது காக்க பாடுபட்டோம்.
இன்று போரும் இல்லை, அமைதியுமில்லை. போராட்டமும் இல்லை, உரிமைகளும் இல்லை. சத்தமுமில்லை, மனதில் இனிமையுமில்லை. புதிது புதிதாக அவலங்கள் தோன்றுகின்றதை என்னவென்று சொல்ல. நுன் கடன் உதவி என்ற பெயரில் வீட்டின் அனைத்து சொத்துக்களையும் அடகு வைக்கிறோம். உதவி என்ற பெயரில் அழிவின் பாதையை தேர்ந்தெடுக்கிறோம். சமரசம், புரிந்துணர்வு என்ற பெயரில் மறைமுகமாக அடையாளங்களை இழக்கிறோம். சமயங்களை மையப்படுத்தி இன அடையாளத்தையும் ஒற்றுமையையும் குலைக்கப் பார்க்கின்றோம்.
உண்மையான உறவுகள் தங்கள் உயிரைக் கொடுத்து மற்றவர்களை காத்ததை தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால் இன்று உண்மையான நண்பர்களை காண்பதே கடினமாய்ப் போனது. ஏமாத்துதல்களும், விரட்டல்களும் நாளாந்த பழக்கமாக மாறுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. வீடுகளிலும், பாடசாலைகளிலும், கோவில்களிலும் ஆலயங்களிலும் நின்ற நம் இளசுகள், வீதிகளிலும் சந்திகளிலும் வாள்களோடும் தடிகளோடும் அலைந்து திரிகிறார்கள்.
எங்கே போகிறது இந்த ஈழத் தமிழினமும் அதன் கலாச்சாரமும் என்று கேட்கத் தோன்றுகிறது. அநியாயம் செய்கிறவர்கள் தென்நாட்டவர்கள் என்றால், இன்று அவர்களை விட சொந்தக்காரர்களே துரோகம் செய்தால், யாரிடம் செல்வது, சொல்வது.
சகோதரி வித்தியா தொடங்கி, இந்நாட்களில் அரியாலையில் வீழ்ந்த உறவுகளை தொலைத்ததும் நம் இனத்து 'வீர புருசர்கள்' என்று நினைக்கும் போது வேதனையாக மட்டுமல்ல... வெறுப்பாகவும் உள்ளது...
20மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
(மத்தேயு 26,20-21).
மி. ஜெகன் குமார் அமதி
வசந்தகம்.